ஈரோடு: நெல்லூரை சேர்ந்த தொழிலதிபரின் காரை கடத்தி, ரூ.2 கோடியை கொள்ளையடித்து சென்றவர்கள் குறித்து தனிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் பர்கத்சிங். தொழிலதிபர். இவரது மகள் கோவையில் தங்கியுள்ளார். இவர்களிடம் கார் ஓட்டுநராக விகாஸ் ராகுல் (32) பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் கோவையில் இருந்து நெல்லூருக்கு காரில் விகாஸ் ராகுல் புறப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த லட்சுமி நகர், காவிரி பாலம் அருகே அதிகாலையில் கார் சென்றபோது, 5 பேர் கொண்ட கும்பல் காரை தடுத்து நிறுத்தி, ஓட்டுநரைத் தாக்கி கீழே தள்ளிவிட்டு காரை கடத்திச் சென்றது.
இதுகுறித்து, லட்சுமி நகரில் உள்ள காவல்துறை சோதனைச் சாவடியில் ராகுல் புகார் அளித்தார். இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் நடத்திய விசாரணையில், கங்காபுரம் அருகே கார் கண்டுபிடிக்கப்பட்டது.
கடத்தப்பட்ட காரில் ரூ.2 கோடி ரொக்கம் இருந்ததாகவும் அது திருடப்பட்டதாகவும் போலீஸாரிடம் ஓட்டுநர் ராகுல்தெரிவித்தார். இதையடுத்து காரைதிருடி, அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்தவர்கள் குறித்த விசாரணையை தனிப்படை போலீஸார் தொடங்கியுள்ளனர்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவிபதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடைபெறுவதாக போலீஸார் தெரிவித்தனர். திருடுபோன பணம் குறித்து பர்கத் சிங் உள்ளிட்டோரிடமும் விசாரிக்கப்படுகிறது.