மதுரை: மதுரையில் 16.5 கிலோ குட்கா கடத்தியதாக இலங்கையைச் சேர்ந்தவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை சுப்பிரமணியபுரம் சார்பு ஆய்வாளர் அன்புதாசன் பழங்காநத்தம் வஉசி பாலத்தில் வாகன சோதனை செய்தார். அப்போது வாகனத்தில் வந்தவர்களை நிறுத்த முயன்றார். தப்பியோட முயன்ற அவர்களைப் பிடித்து விசாரித்ததில், ஹார்விபட்டியைச் சேர்ந்த காசி விஸ்வநாதன், இலங்கையைச் சேர்ந்த சிவராஜ் என்பதும், பெங்களூருவில் இருந்து 16.5 கிலோ குட்கா கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
மேலும் விசாரணையில் சிவராஜ் இலங்கை முல்லைத்தீவை சேர்ந்தவர் என்பதும், கள்ளத்தனமாகப் படகு மூலம் ராமேசுவரம் வந்து, திருப்பத்தூர் முகவர் செல்வம் மூலம் ராஜேஷ் என்ற பெயரில் சென்னையில் போலி முகவரியில் ஓட்டுநர் உரிமம் பெற்று பாஸ்போர்ட் வாங்கி துபாய் சென்றது தெரிய வந்தது.
பின்னர் அங்கிருந்து இலங்கை சென்று, இந்தியா வந்தபோது பாஸ்போர்ட்டை தொலைத்ததாக ஒப்புக்கொண்டார். மீண்டும் பாஸ்போர்ட் பெறுவதற்காக, துபாய் நண்பர் மூலம் பழக்கமான காசி விஸ்வநாதனுடன் சேர்ந்து பெங்களூருவில் இருந்து மதுரைக்கு குட்காவை கடத்தியதையும் ஒப்புக் கொண்டார். இது தொடர்பாக காசிவிஸ்வநாதன், சிவராஜ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.