Loading

ராய்ப்பூரில் ராஜ்ஜியம் செய்த இந்திய பௌலர்களால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரைச் சுலபமாக வென்றது இந்தியா.

சர்வதேச போட்டி ஒன்று ராய்ப்பூரில் நடைபெறுவது இதுவே முதல்முறை என்பது மட்டுமல்ல, இது இந்தியாவில் ஒருநாள் போட்டிகளுக்கான 50-வது ஆடுகளம் என்பதும் இந்திய கிரிக்கெட்டின் இன்னொரு மைல்கல். அதிலும் பச்சைப் பசேலென்ற புல்விரிப்பு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பளிப்பதோடு அவர்களது பந்துக்குத் தீனி போடுவதாக அமைந்திருப்பதும் இன்னொரு சிறப்பே! டாஸை வென்ற ரோஹித், சற்றுநேரம் மௌனம் காத்து எல்லோரையும் குழம்ப வைத்தாலும் ஃபீல்டிங்கையே தேர்ந்தெடுப்பார் என்பது மேற்கூறிய காரணங்களால் முன்கூட்டியே தெரிந்துவிட்டது எனலாம்.

India

எல்லாக் களங்களும் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவளிப்பதில்லை. அப்படியே தரும் சந்தர்ப்பங்களில் கூட வெள்ளைப் பந்துகள் என்றால், அதைச் சந்திக்கும் பேட்ஸ்மேன்களே பெரும்பாலும் கோலோச்சுவது போன்ற சூழ்நிலைகள் உருவாகும். களமும் கைகொடுத்து, பௌலர்களும் இருக்கும் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கி தாங்கள் வீச நினைத்த பந்துகளைக் கனகச்சிதமாக வீச முடிந்தால், அந்நாளில் அவர்களின் தனிஆவர்த்தனம் அரங்கேறும். அப்படியொரு ஆட்டமாகவே இந்தியா – நியூசிலாந்துக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இருந்தது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அற்புதமாகத் தொடங்கி வைக்க, ஸ்பின்னர்கள் சிறப்பாக முடித்துவைக்க 35 ஓவர்களுக்குள்ளாகவே ஆல்அவுட் ஆனது நியூசிலாந்து. முதல் போட்டியிலேயே நியூசிலாந்து டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் பெரிதாகச் சோபிக்கவில்லை. ஃபின் ஆலன் தந்த ஓப்பனிங்கையும், மரணபயம் ஏற்படுமாறு பிரேஸ்வெல் காட்டிய அதிரடியையும், சான்ட்னர் உடனான அவரது பார்ட்னர்ஷிப்பையும் கழித்துப் பார்த்தால் அவர்களது பேட்டிங் படை தோற்றது தெளிவாகும். இப்போட்டியும் அதனை அபாய மணியோடு நியூசிலாந்துக்கு உணர்த்துவதாக இருந்தது.

Shami

பந்துகள் ஸ்விங் ஆகின, கூடவே களமும் சற்றே மூவ்மென்ட்டோடு கரிசனம் காட்டியது. இவற்றுடன் புதுப்பந்தும் பரிவு காட்ட ஷமியின் அப்ரைட் சீம் பந்துகள் மாயாஜாலம் நிகழ்த்தின.

டெஸ்ட் போட்டியைப் போல, செட் செய்து விக்கெட்களை எடுத்தார் ஷமி. முதல் ஓவரில், ஃபின் ஆலனுக்குத் தொடர்ந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசி செட் செய்து, பின் ஒரு இன்ஸ்விங்கரை விஷம் தோய்த்த கத்தியாக உள்ளே சொருக அதை எதிர்பாராத ஆலனால் பந்து இன்சைட் எட்ஜ்ஜாகி ஸ்டம்பைத் தகர்ப்பதை மட்டுமே காண முடிந்தது. மிட்செல்லுக்கு எதிரான காட் அண்ட் பௌல் அற்புதமென்றால், பிரேஸ்வெல்லுக்கு எதிரான கம்பேக் அதிஅற்புதம். முதல் பந்து லோ ஃபுல் டாஸாகி பவுண்டரி லைனைப் பார்க்க, அடுத்த பந்தில் முயற்சி செய்த இன்னொரு ஸ்லோ யார்க்கரும் லோ ஃபுல் டாஸாகி பவுண்டரியானது. அதற்கடுத்த பந்திலேயே எதிர்பாராத கில்லர் பவுன்சரை ஏவி பிரேஸ்வெல்லை பெவிலியனுக்கு பார்சல் செய்தார். ஷமி பல போட்டிகளில் வெகுசிரமத்தோடு தனது திட்டங்களை நகர்வுகளாக்கினாலும், அதிர்ஷ்டம் பொதுவாகக் கைகொடுக்காது. இப்போட்டி அதனை மாற்றி எழுதியது. 

முதல் ஓவரையே ஷமி விக்கெட் மெய்டன் ஆக்கி தந்த பேரதிர்ச்சிதான், போட்டி முழுவதும் வியாபித்தது. என்றாலும் கூடவே கணித்தறிய முடியாத தனது Wobble Seam-ஐ ஆயுதமாக்கி சிராஜ் நிக்கோல்ஸை அனுப்பியது இன்னொரு முனையிலிருந்தும் நியூசிலாந்து வீரர்களை அச்சுறுத்தியது.

இதே தாக்கத்தை தொடர்ந்து இவர்களால் ஏற்படுத்த முடிந்து, பும்ராவும் உள்ளே வந்துவிட்டால் இந்திய வேகப்பந்துவீச்சில் காணப்பட்டு வந்த பள்ளங்கள் அடைபட்டு ஒட்டுமொத்த அணியுமே மீண்டெழும்.

Hardik

சமீபகாலத்தில் பார்ட்டைம் ஃபாஸ்ட் பௌலர்தான் என்றாலும் பாண்டியா சமயத்தில் அணியின் பிரதான பௌலராகவே ஆதிக்கம் காட்டுகிறார். இப்போட்டியிலும் அவர் வீசிய முதல் ஓவரையே விக்கெட் மெய்டனாக்கி அதகளம் காட்டினார்.

பேக் ஆஃப் லெந்தில் அவர் வீசிய பந்தை ஆன் ட்ரைவ் செய்ய கான்வே முயல, மிகக் கடினமான ஒரு கேட்சின் மூலமாக அவர் வெளியேறினார். இறுதியில் நியூசிலாந்துக்கு நம்பிக்கை அளித்துக் கொண்டிருந்த சான்ட்னரை ஒரு ஸ்லோ பால் மூலம் வெளியேற்றியதும் சிறப்பான செய்கைதான். முன்பாக டி20-ன் நான்கு ஓவர்களைக்கூட வீச முடியாமல் சிரமப்பட்ட பாண்டியா தற்சமயம் ஒருநாள் போட்டிகளில் பந்து வீசும் அளவுக்கு உடல் தகுதி பெற்றிருப்பது இந்தியாவுக்கான சாதகமான அம்சம்.

இந்திய பௌலர்கள் சிறப்பாக வீசினார்கள்தான், களமும் கருணை காட்டியதுதான் என்றாலும் நியூசிலாந்திடமிருந்தும் சிறிதளவுகூட போராட்டமே வெளிப்படவில்லை. ஒட்டுமொத்தமாகச் சரணடைந்து விட்டனர். பொதுவாக ஒருநாள் போட்டிகளில் தொடக்கத்தில் தடுமாறும் அணிகள் பிறகு மெல்ல மெல்ல கரை ஏறும். அதற்கான கால அவகாசம் இங்கே உண்டு, ஓவர்களது அணிவரிசையும் அதற்கான வாய்ப்பினைக் உண்டாக்கும். ஆனால் இப்போட்டியில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களிடம் இருந்து பொறுப்பான ஆட்டம் வெளிப்படவே இல்லை. கொஞ்சமும் திரும்பி எழ அவர்கள் முயன்றது போலவே தெரியவில்லை. அசிரத்தையாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். சிறிதேனும் களத்தைக் கணித்தறிய முற்படாமல் அவசரகதியில் வெளியேறினர்.

11 பேரில் எட்டு பேர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். பிலிப்ஸ் மட்டுமே 30 ரன்களைத் தாண்டினார்.

க்ளென் பிலிப்ஸ்

பிலிப்ஸ் – சான்ட்னர் கூட்டணி மட்டுமே கொஞ்சம் தாக்குப்பிடித்தது. கிட்டத்தட்ட 12 ஓவர்கள் நிலைத்து நின்று ஆடி 56/6 எனும் நிலையிலிருந்து மூன்றிலக்கமாக ஸ்கோரை மாற்றியது. 103 ரன்கள் இருக்கும்போது சான்ட்னரின் விக்கெட் விழ, பின் மேலும் ஐந்து ரன்களை சேர்ப்பதற்குள் கைவசமிருந்த மூன்று விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது நியூசிலாந்து. உபயம் – இந்திய சுழற்பந்து ஜாலம். ஆர்.சி.பி நாள்களில் பவர்பிளே ஓவர்களிலேயே விக்கெட் எடுத்துப் பழக்கப்பட்ட சுழல் சுந்தர்தான் இறுதிகட்ட தாக்குதல் மூலம் பிலிப்ஸையும், ஃபெர்கூசனையும் வெளியேற்றினார்.

பௌலர்கள் பட்டியலில் யாரும் விக்கெட்டின்றி வெறுங்கையுடன் வெளியேறக் கூடாதென குல்தீப்பின் லெக் பிரேக்கில் டிக்னரும் வெளியேறினார். முதல் பாதியின் தொடக்கம் முதல் முடிவு வரை போட்டி முழுமையாக இந்திய பௌலர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. 17-வது ஓவர் வரைகூட ரன்ரேட் 2.5-க்கும் கீழேயே பயணித்தது. ஃபுல் லெந்தில் வீசப்பட்ட சில பந்துகள் ரன்களாகியதும் சுதாரித்து அதையும் மாற்றி, வேகப்பந்து வீச்சாளர்கள் ரன் கசிவைக் கட்டுப்படுத்தியதோடு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆக ஓவர் ஒன்றிலிருந்தே போட்டி ஒன்சைடட் மேட்சாக மட்டுமே நகர்ந்தது. முதல் போட்டியில் தந்த ஏமாற்றத்தை இந்திய பௌலர்கள் இதில் துடைத்தெறிந்தனர்.

எளிய இலக்கென்பதால் அதனை எவ்வளவு சீக்கிரமாக இந்தியா எட்டுமென்பது மட்டுமே இரண்டாவது பாதியின் மீதான ஒரே எதிர்பார்ப்பாக இருந்தது. அதையும் தங்களது பேட்டிங்கிற்குத் தாங்களே சவால் விட்டுக்கொள்ளும் வகையில் பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில்… அதுவும் அதிவேகமாக எட்ட முடியுமா என்ற கேள்வியும் எழுந்தது. நியூசிலாந்தின் தொடக்க ஓவர்கள் இந்திய ஓப்பனர்களைச் சற்றே திணறடித்தது. ஆனால் அதன்பிறகு இந்தியாவின் கை ஓங்கத் தொடங்கியது. ஹூக் ஷாட்டில் ரோஹித் அடித்த சிக்ஸர், கில்லின் ஸ்கொயர் டிரைவ் என சில ஷாட்கள் கண்களுக்கு விருந்தாகின. குறிப்பாக ரோஹித்தின் ஷாட்டுகள் கொள்ளையடித்தன. இருப்பினும் இந்திய அணியின் முதல் பத்து ஓவர்களில் 41 பந்துகள் டாட் பால் ஆனது சின்ன குறைபாடுதான்.

Rohit

ரோஹித் அரைசதத்தை கடந்தார் என்றாலும் ஆட்டமிழக்கும் முன் அவர் அடித்த 51 ரன்களில் 40 ரன்கள் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் மூலமாகவே வந்திருந்தன. அதாவது 78 சதவிகித ரன்கள் அந்த வகையிலேயே சேர்ந்திருந்தன.

ஆக சந்தித்த 50 பந்துகளில் பெரும்பாலானவை ஸ்ட்ரைக் ரொடேட் செய்யப்படாமல் வீணடிக்கப்பட்டிருக்கின்றன. குறைவான இலக்கு என்பதால் இது பெரிய இடர்பாடாக ஆகாமல் விட்டாலும் ஒரு பெரிய இலக்கைத் துரத்துகையில் இதுவே அணிக்கு எதிராகத் திரும்பலாம். எதிர்காலத்தில் இதிலும் இந்தியா கவனம் வைக்க வேண்டும். 

ஷுப்மன் கில்

இறுதியாக 20.1 ஓவர்களில் மிட் ஆனுக்கு மேலே பயணித்து பவுண்டரியான கில்லின் வின்னிங் ஷாட் மூலமாக எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. இதன் மூலம் இன்னுமொரு பைலேட்டரல் தொடரைக் கைப்பற்றியிருக்கிறது. 

சொந்த மண்ணில் நியூசிலாந்துடன் ஆடிய 37 ஒருநாள் போட்டிகளில் 28-ல் வென்றுள்ள இந்தியா எட்டில் மட்டுமே தோற்றுள்ளது. ஒரு போட்டி முடிவை எட்டவில்லை. தொடராகக் கணக்கிட்டால் 7-ல் ஆடி 7-ஐயுமே இந்தியா வென்றுள்ளது. ஆக இந்தியாவின் ஆதிக்கம் தொடர்கிறது. இருதரப்பு தொடர்களில் மட்டுமின்றி உலகக்கோப்பை வரை இது நீட்சியுற வேண்டும். மேலும் இந்த ஒவ்வொரு கோப்பையும் அந்தப் பெரிய அரங்கத்திற்கான அடித்தளமாக அமைய வேண்டும் என்பதே ரசிகர்களின் பேராவல்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *