Loading

புதுச்சேரி: விபத்தில் தனது தாத்தா அடிபட்டதால் சாலையை தானே சீரமைத்த சிறுவனின் வீடு தேடி சென்று நேரில் பாராட்டிய அதிமுகவினர் முதல்வர் ரங்கசாமியை கடுமையாக விமர்சித்தனர்.

வில்லியனூர் பத்துக்கண்ணு சாலை பிரதான சாலையாக உள்ளது. தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் இச்சாலை வழியாக சென்று வருகின்றன. இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளாக இச்சாலை சீரமைக்கப்படாததால் ஆங்காங்கே ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. சில இடங்களில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஒட்டிகள் தினமும் சாலையில் உள்ள பள்ளத்தில் விழுந்து ரத்தக் காயங்களுடன் செல்கின்றனர்.

இந்த நிலையில் சேந்தநத்தம் பகுதியை சேர்ந்தவர் சேகர் (60) தனது பைக்கில் இச்சாலையில் செல்லும் போது பள்ளத்தில் விழுந்து பிரேக் போட்டுள்ளார். அப்போது பின்பக்கமாக வந்த பைக் மோதி கீழே விழுந்துள்ளார். இதனால் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது பேரன் மாசிலாமணி (13) என்ற சிறுவன் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். தனது தாத்தா விழுந்த பள்ளத்தில் மற்றவர்கள் யாரும் விழுந்து அடிப்படக் கூடாது, ஏதேனும் உயிர் சேதம் ஏற்படக்கூடாது என்று எண்ணி சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். இச்சாலையில் ஒரு சிறுவன் தனி ஒரு ஆளாய் நின்று ஆங்காங்கே கிடக்கும் சிமெண்ட் கற்கள், சாலையோரம் உள்ள மணல் ஆகியோவற்றை போட்டு சுத்தியால் தட்டி தண்ணீர் ஊற்றி மட்டம் செய்து சாலையை சீரமைத்துள்ளார். ஒரு சிறுவனின் இத்தகைய செயல் அரசுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. எனவே உடனடியாக இச்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் அச்சிறுவன் வீட்டுக்கு இன்று சென்றார். அங்கு அச்சிறுவனை பாராட்டினார்.

பின்னர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் கூறியதாவது:, “புதுச்சேரி முழுக்க சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. அதை சரி செய்ய திராணியற்ற முதல்வருக்கு பாடம் புகட்ட, தனக்கு கிடைத்த பொருட்களை கொண்டு சாலையை சிறுவன் சீரமைத்துள்ளார். அவரை அதிமுக சார்பில் பாராட்டியுள்ளோம். புதுச்சேரி மாநிலத்தில் சாராய ஆட்சி செய்யும் முதல்வர் ரங்கசாமிக்கு மக்கள் மீது துளியும் அக்கறையில்லை. சாலை போடாதது, ரேஷனில் அரிசி, சர்க்கரை போடாதது கேட்டால் மாநில அந்தஸ்து இல்லை என்று கூறி விட்டு கிராமங்களில் மது பாரும், சாராய தொழிற்சாலையும் திறக்கிறார். நகரங்களில் ஆபாச நடனத்துடன் கூடிய பாரை திறக்கிறார். மாநில அந்தஸ்து எனக்கூறி மக்களை ஏமாற்றி சாராய முதலாளிகளுக்கு செய்யவே யோசனையை முதல்வர் செய்கிறார். தயவு கூர்ந்து முதல்வர் ரங்கசாமி இருக்கும் வரை மக்கள் தங்ளை தாங்களேதான் பார்த்துக் கொள்ளவேண்டும். தங்களுக்கு தேவையானதை தாங்களே செய்யவேண்டிய சூழல்தான் உள்ளது” என்று குறிப்பிட்டார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *