நெல்லை மாநகரம், தச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் எம்.எல்.ஏ-வின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட இருக்கின்றன. அதற்கான பணிகளை அடிக்கல் நாட்டித் தொடங்கிவைக்கும் விழா நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும், நெல்லை தொகுதியின் எம்.எல்.ஏ-வுமான நயினார் நாகேந்திரன் இந்த விழாவில் பங்கேற்றார்.

செய்தியாளர் சந்திப்பு

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், ”இந்தத் தொகுதியில் ஐந்து முறை போட்டியிட்டிருக்கிறேன். எனக்கு வாக்களித்த தொகுதி மக்களுக்கு பல்வேறு நல்ல திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்கிற ஆர்வத்தில் செயல்பட்டுவருகிறேன். இந்தத் தொகுதிக்காக சட்டமன்றத்தில் பேசி திட்டங்களை நிறைவேற்றி வருகிறேன்.

நெல்லை மாநகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக இருக்கின்றன. மாநகரிலுள்ள சாலைகளில் சில நெடுஞ்சாலைத்துறை வசம் இருக்கின்றன. அவற்றையும் செப்பணிட வேண்டும் என்று அதிகாரிகளைச் சந்தித்து கோரிக்கை விடுத்திருக்கிறேன். மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ.350 கோடி செலவில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடக்க இருக்கிறது.

நெல்லை, சுத்தமல்லி பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க நடவடிக்கை எடுத்துவருகிறேன். மாநகரின் சாலைகளைச் செப்பணிட தமிழக அரசு 20 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறது. அதனால் விரைவில் சாலைகள் அனைத்தும் சரிசெய்யப்படும். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளையும் சந்தித்துப் பேசி வருகிறேன்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஈரோடு தொகுதியில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருந்த த.மா.கா போட்டியிட்டது. அந்தத் தொகுதியில் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் அப்போது வெற்றி வாய்ப்பு கைநழுவிப் போனது. இந்த முறை எங்கள் கூட்டணி நிச்சயமாக வெற்றியைக் கைப்பற்றும். தற்போது நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் யார் போட்டியிட வேண்டும் என்பதைக் கட்சி மேலிடம் பேசி முடிவு செய்யும். அ.தி.மு.க-வில் பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்தால் மட்டுமே அந்தக் கட்சியின் பலம் அதிகரிக்கும். அதனால், அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

நயினார் நாகேந்திரன்

ஆளுநர் சட்ட விதிகளுக்கு உட்பட்டு செயல்பட்டுவருகிறார். ஆனால், அவரது செயல்பாடுகளை அரசியலாக்கப் பார்க்கிறார்கள். `தமிழ்நாடு’, `தமிழகம்’ ஆகிய இரண்டும் ஒன்றுதான். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற டாஸ்மாக் நேரத்தைக் குறைக்க வேண்டும் என ஏற்கெனவே நான் சட்டமன்றத்தில் பேசியிருக்கிறேன். அதனால் படிப்படியாகவாவது டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்.

சேது சமுத்திர திட்டம் அமைந்தால் நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெருகும். நாட்டுக்கும் வருவாய் கிடைக்கும். அது குறித்து மத்திய அமைச்சரும் ஏற்கெனவே கருத்து தெரிவித்திருக்கிறார். அ.தி.மு.க-வைப் பலவீனப்படுத்த வேண்டும் என்பது எங்களின் நோக்கம் அல்ல. எங்களின் ஆதரவுடனே எடப்பாடி பழனிசாமி நான்கு வருடங்கள் முதல்வராக நீடித்தார். அதனால் அ.தி.மு.க-வைப் பலவீனப்படுத்துவது எங்கள் நோக்கம் என்று சொல்வது உள்நோக்கம் கொண்டது.

பேட்டியளிக்கும் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ

நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தேர்தல் வரும்போது கட்சித் தலைமை ஆலோசித்து அறிவிக்கும். இப்போதே அது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. எங்களைப் பொறுத்தவரையிலும் அ.தி.மு.க-வின் அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றியைக் கைப்பற்ற முடியும். அதனால் அனைவரும் இணைய வேண்டும் என்பதே என் விருப்பம்” என்று தெரிவித்தார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *