India
oi-Jackson Singh
டேராடூன்: நிலச்சரிவால் பூமிக்குள் மூழ்கிக் கொண்டிருக்கும் உத்தராகண்டின் ஜோஷிமத் நகருக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு சென்ற கேரள பாதிரியார் 500 அடி பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜோஷிமத் நகர மக்களுக்காக தானே முன்னின்று பணத்தையும், நிவாரணப் பொருட்களையும் திரட்டிய அவர், அவற்றை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்திருப்பது அனைவரையும் கண் கலங்கச் செய்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்ட நிலையில், இறுதிச்சடங்கு செய்தவதற்காக கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சர்ச் வாசலில் குப்பை.. கேள்விக்கேட்ட பாதிரியார்.. புரட்டி எடுத்த கவுன்சிலர் கணவர்! கடலூரில் ‘ஷாக்’

ஜோஷிமத் மக்களுக்காக..
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள மலையோர நகரமான ஜோஷிமத் சிறிது சிறிதாக பூமிக்குள் புதைந்து வருகிறது. மிகவும் மோசமான புவியியல் அமைப்பில் அமைந்துள்ள ஜோஷிமத் நகரில் எந்தவிதமான சுரங்கத் திட்டங்களையும், நீர்மின் திட்டங்களையும் செயல்படுத்தக் கூடாது என 1976-ம் ஆண்டே எச்சரிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதையும் மீறி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதே தற்போதைய அந்நகரின் அழிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, அங்கு வசித்து வரும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, அவர்களுக்கு தேவையான உணவுப்பொருட்கள், மருந்துகள், உடைகள் போன்றவை இல்லை எனக் கூறப்படுகிறது.

உதவ முன்வந்த கேரள பாதிரியார்..
இதனிடையே, ஜோஷிமத் மக்களுக்காக கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த மெல்வின் ஆபிரஹாம் (37) எனற பாதிரியார் தாமாக முன்வந்து நிவாரணப் பொருட்களையும், பணத்தையும் சேகரித்து வந்தார். பின்னர், அந்த நிவாரணப் பொருட்களையும், பணத்தையும் எடுத்துக்கொண்டு ரயில் மூலமாக கடந்த வாரம் உத்தராகண்ட் சென்றார். பின்னர் அங்கிருந்த மற்றொரு பாதிரியார் மற்றும் அவரது நண்பருடன் சேர்ந்து ஜோஷிமத்துக்கு கடந்த புதன்கிழமை அவர்கள் ஜீப்பில் சென்றுள்ளனர்.

500 அடி பள்ளத்தாக்கு
ஜீப்பை பாதிரியார் மெல்வின் ஆபிரஹாம் ஓட்டிச்செல்ல, மற்ற இருவரும் பின்னால் அமர்ந்திருந்தனர். இந்நிலையில், ஜோஷிமத் நகருக்கு அருகில் வந்த போது அவர்களின் ஜீப், சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கியது. இதையடுத்து, அந்த ஜீப்பை பின்னால் எடுப்பதற்கு அவர் முயற்சித்தார். ஆனால் முடியவில்லை. இதனைத் தொடர்ந்து, ஜீப்பில் இருந்த மற்ற இருவரை இறங்க கூறிய பாதிரியார் மெல்வின், சரியாக வண்டி வெளியே வருகிறதா என பார்க்குமாறு கூறினார். அதன்படி, அவர்கள் இருவரும் இறங்கி பார்த்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக, திடீரென ஜீப் வேகமாக பள்ளத்தில் இருந்து வெளியே வந்து அங்கிருந்த 500 அடி பள்ளத்தாக்கில் பாய்ந்தது.

மீட்கப்பட்ட பாதிரியார் உடல், நிவாரணப்பொருட்கள்
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் இருவரும், இதுகுறித்து போலீஸாருக்கும், மீட்புப் படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்கள் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். எனினும், பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்களால் ஜீப்பை கண்டறிய முடியவில்லை. இதையடுத்து, இரு தினங்களுக்கு பிறகே அவர்கள் ஜீப்பை கண்டுபிடிக்க முடிந்தது. ஜீப்புக்குள் பாதிரியார் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். தொடர்ந்து, அவரது உடல் மீட்கப்பட்டு மேலே கொண்டு வரப்பட்டது. பின்னர் இறுதிச்சடங்குக்காக அவரது உடல் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே, அவர் கொண்டு வந்த நிவாரணப் பொருட்கள், பணமும் ஜீப்பில் இருந்து எடுக்கப்பட்டு ஜோஷிமத் மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
English summary
A Kerala priest fell down a 500-feet gorge and died while carrying relief supplies to Joshimath city in Uttarakhand, which is sinking into the ground due to a landslide.
Story first published: Sunday, January 22, 2023, 12:44 [IST]