Loading

International

oi-Nantha Kumar R

Google Oneindia Tamil News

காபூல்: ஆப்கானிஸ்தானை கடந்த 2021ல் மீண்டும் தாலிபான்கள் கைப்பற்றினர். தற்போது தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்து வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு எதிராக மிகவும் பிற்போக்கு தனத்தை கடைப்பிடித்து வருகின்றனர். பொதுவெளியில் நடமாட தடை, பள்ளி, கல்லூரிகளில் படிக்க தடை, லைசென்ஸ் எடுக்க தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் பெண்களுக்கு தாலிபான்கள் விதித்துள்ள நிலையில் தான் ஜவுளிக்கடை பெண் பொம்மைகளையும் விட்டு வைக்காமல் புதிய கட்டுபாடு ஒன்றை தாலிபான்கள் விதித்து அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் நடந்த உள்நாட்டு போரை அமெரிக்க படைகள் முடிவுக்கு கொண்டு வந்து அங்கேயே முகாமிட்டு இருந்தன. இந்நிலையில் தான் அமெரிக்காவில் அதிபராக பொறுப்பேற்ற ஜோபைடன், அமெரிக்க படைகளை நாடு திரும்ப உத்தரவிட்டார்.

2021ல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் நாடு திரும்பின. இதையடுத்து தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றின. 2021 ஆகஸ்ட்டில் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றின. தற்போது அங்கு தாலிபான்கள் ஆட்சி நடக்கிறது.

கடும் கட்டுப்பாடுகள்

கடும் கட்டுப்பாடுகள்

இதற்கு முன்பு 1996 முதல் 2001 வரை ஆப்கனை தாலிபான்கள் ஆட்சி செய்த நிலையில் தற்போது 2வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளனர். தாலிபான்கள் மதத்தின் அடிப்படையில் பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். தற்போது அதனை பின்பற்றி வருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக புதுபுது கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்து வருகின்றனர்.

பெண்கள் தனியாக நடந்து செல்லக்கூடாது

பெண்கள் தனியாக நடந்து செல்லக்கூடாது

கட்டுப்பாடுகள் என்ற பெயரில் பெண்களின் அடிப்படை உரிமைகள் அங்கு பறிக்கப்பட்டு வருகிறது. இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட தாலிபான்கள் கண்டுக்கொள்ளாமல் உள்ளன. பெண்கள் தனியாக நடந்து செல்லக்கூடாது. வெளியே வந்தால் முகம் முதல் கால் வரை முழுவதுமாக மறைக்கும் புர்கா அணிய வேண்டும். பூங்கா, ஜிம் செல்லக்கூடாது. பள்ளி, கல்லூரிகளுக்கு படிக்கக்கூடாது. வாகனங்கள் ஓட்டக்கூடாது. வெளிநாடுகளுக்கு சென்று படிக்க கூடாது, ஓட்டலில் ஆணுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் என்ஜிஓக்களில் பணியாற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக பெண்களுக்கு எதிரான உத்தரவுகளால் வீட்டிலேயே அவர்களே தாலிபான்கள் முடக்கி உள்ளனர்.

பெண் பொம்மைகளுக்கு புதிய உத்தரவு

பெண் பொம்மைகளுக்கு புதிய உத்தரவு

இந்நிலையில் தான் தற்போது தாலிபான்கள் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். இந்த உத்தரவு என்பது ஜவுளிக்கடை பொம்மையை குறிவைத்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது பொதுவாக ஜவுளி கடைகளில் ஆளுயர பொம்மைகள் புதிய டிசைன் ஆடைகளுடன் பொதுமக்களை கவரும் வகையில் வைக்கப்பட்டு இருக்கும். இந்த பொம்மைகளுக்கு தலை இருக்கக் கூடாது என்று தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. தலையுடன் கூடிய பொம்மைகள் வைப்பது இஸ்லாமிய வழக்கத்திற்கு எதிரானது என்பதால் தலையில்லாமல்தான் பொம்மைகள் இருக்க வேண்டும் என்று தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மூடப்பட்ட முகங்கள்

மூடப்பட்ட முகங்கள்

அதன்படி தற்போது ஜவுளிக்கடைகளில் உள்ள பெண் பொம்மைகளின் முகங்களை கருப்பு நிறத்திலான கவர், துணி கொண்டு கடைக்காரர்கள் மூடி வைத்துள்ளனர். இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அனைத்து ஜவுளிக்கடைகளில் உள்ள பொம்மைகளின் முகங்களும் தற்போது மூடப்பட்டுள்ளது. இதுபற்றி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஜவுளிக்கடைக்காரர் கூறுகையில், ‛‛தற்போது பொம்மைகளின் முகத்தை மறைக்க கூறியுள்ளனர். இது பரவாயில்லை. ஏனென்றால் இதற்கு முன்பு பொம்மைகள் வைக்க கூடாது எனவும், தலை இருந்தால் அதனை வெட்டியும் அகற்றினர். அந்த உத்தரவை ஒப்பிடும்போது இது பரவாயில்லை” என நிம்மதி அடைந்தார். இருப்பினும் கூட தாலிபான்களின் இத்தகைய செயலுக்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

 பெண்களின் வாழ்க்கை மோசமாகும்

பெண்களின் வாழ்க்கை மோசமாகும்

சாரா வஹேதி என்ற ஆப்கானிய மனித உரிமை ஆர்வலர் தனது ட்விட்டர் பக்கத்தில் முகங்கள் மறைக்கப்பட்ட பொம்மைகளை வெளியிட்டுள்ளார். இதில், ‛‛பெண்கள் மீதான தலிபான்களின் வெறுப்பு உயிருக்கு அப்பாற்பட்டது. பொம்மைளின் முகத்தை மறைக்க கடை உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொம்மைகளுக்கே இந்த நிலைமை என்றால் வரும் காலத்தில் ஆப்கானிஸ்தான் பெண்களின் வாழ்க்கை எவ்வளவு மோசமாக மாறப்போகிறது என்பதை நினைத்து பார்க்க வேண்டும். பெண்களின் வாழ்க்கை மோசமாகும் என்பதற்கான அறிகுறியாக தான் இது இருக்கும்” என தெரிவித்துள்ளார். இந்த பதிவை பார்த்த பலரும் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தாலிபான்களை கடுமையாக வ விமர்சனம் செய்து வருகின்றனர்.

English summary

The Taliban took over Afghanistan in 2021. The Taliban are currently imposing various restrictions. They are very regressive especially against women. While the Taliban have imposed various restrictions on women including ban on walking in public, ban on studying in schools and colleges, ban on taking license, the Taliban has imposed a new restriction on textile shops, leaving out the girls’ dolls, leaving everyone in shock.

Story first published: Saturday, January 21, 2023, 12:38 [IST]

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *