International
oi-Vigneshkumar
மாஸ்கோ: உக்ரைன் போர் சுமார் ஓராண்டாகத் தொடரும் நிலையில், ரஷ்ய அதிபர் புதின் குறித்து ஜெலன்ஸ்கி கூறிய தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ரஷ்யாவும் பதிலடி கொடுத்துள்ளது.
உக்ரைன் நாட்டில் கடந்தாண்டு பிப். மாதம் தொடங்கிய போர் ஓராண்டாக கடந்தாண்டும் இன்னும் தொடர்ந்து வருகிறது. சில வாரங்களில் போர் முடிந்துவிடும் என்றே பலரும் கருதிய நிலையில், போர் அதையும் தாண்டி சுமார் ஓராண்டாகத் தொடர்கிறது.
இந்தப் போர் காரணமாக உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகள் மட்டும் பாதிக்கவில்லை. கொரோனா தொற்றால் மெல்ல மீண்டு வந்த உலக பொருளாதாரம் இதில் மீண்டும் பாதிக்கப்பட்டது.பொருளாதார ரீதியாகக் கடுமையாகப் பாதித்துள்ளன.
அமெரிக்காவில் உள்நாட்டு போர்! நாடே பிளவுபடும்.. ரஷ்ய முன்னாள் அதிபர் பகீர்! இடையில் மஸ்க் வேற! பரபர

உக்ரைன் போர்
இந்தப் போர் ரஷ்யாவுக்கு மிகப் பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. போருக்கு முன்பு வரை உலகின் மிகப் பெரிய ராணுவங்களில் ஒன்றாக ரஷ்யா கருதப்பட்டது. இருப்பினும், உக்ரைன் ராணுவத்தைக் கூட அவர்களால் சமாளிக்க முடியவில்லை. பல பகுதிகளில் தொடக்கக் காலத்தில் அவர்கள் கைப்பற்றிய இடங்களைக் கூட வேறு வழியில்லாமல் இழக்க நேரிட்டுள்ளது. தற்போதைய சூழலில் ராணுவத்தைப் பின்வாங்குவது தனக்கு அவமானம் என்பதால் ரஷ்யா என்ன செய்ய வேண்டும் என்றே புரியாமல் உள்ளது.

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி
இதனிடையே ரஷ்யா அதிபர் புதின் குறித்தும் அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் கூறி தொடர்ச்சியாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. அவருக்கு கேன்சர் உள்ளதாகவும் தனது அரண்மனையில் மயங்கி விழுந்ததாகவும் எல்லாம் தகவல் வெளியானது. இந்தச் சூழலில் டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்னும் உயிருடன் இருக்கிறாரா என்பது கூட தனக்குச் சரியாகத் தெரியவில்லை என்று கூறினார்.

உயிருடன் இருக்கிறாரா என்றே தெரியவில்லை
மேலும், போரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வரப் பேச்சுவார்த்தை நடைமுறைகளை விரைவில் ஆரம்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “இன்று யாருடன் எதைப் பற்றிப் பேசுவது என்று எனக்குச் சரியாகப் புரியவில்லை. திடீர் திடீரென சில சமயங்களில் கம்யூட்டர் கிராப்கஸ் பின்னணியில் தோன்றும் ரஷ்ய அதிபர் புதினுடன் இனிமேலும் பேசுவது சரியானதாக இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. அவர் உயிருடன் இருக்கிறாரா என்பது கூட தெரியவில்லை. அங்கு அவர் தான் முடிவுகளை எடுக்கிறாரா அல்லது யார் முடிவுகளை எடுக்கிறார் என்பது குறித்துக் கூட தெரியவில்லை..

நிஜமாகப் புரியவில்லை
ஐரோப்பியத் தலைவர்களிடம் ஒரு விஷயத்தை நிச்சயம் செய்யவே மாட்டேன் என்று உறுதியளித்துவிட்டு மறுநாளே அதற்கு நேர்மாறாக எப்படி போரை ஆரம்பிக்க முடியும் என்று எனக்கு இன்னுமே கூட புரியவில்லை. நாங்கள் அந்த பக்கம் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் எனத் தெரியவில்லை. அமைதி பேச்சுவார்த்தை என்றால் இப்போது ரஷ்யா பக்கம் இருந்து யாருடன் பேச வேண்டும் என்று எனக்கு இன்னுமே கூட தெளிவாகத் தெரியவில்லை அப்போது தானே பேச்சுவார்த்தையைத் தொடங்க முடியும்” என்று அவர் தெரிவித்தார்,

ரஷ்யா பதிலடி
ஜெலன்ஸ்கி பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்யத் தலைவர்கள், ரஷ்யாவும் அதன் தலைவர் புதினும் இருக்கக் கூடாது என்பதே ஜெலன்ஸ்கியின் விருப்பமாக உள்ளதாக விமர்சித்தனர். இது குறித்து ரஷ்யச் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், “உக்ரைனுக்கும் ஜெலன்ஸ்கிக்கும் ரஷ்யா மற்றும் புதின் ஆகிய இரண்டும் தான் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது தெளிவாகிறது. ஜெலென்ஸ்கி ரஷ்யா அல்லது புதின் இருக்கக் கூடாது என்றே விரும்புகிறார். எவ்வளவு சீக்கிரம் அவர் ரஷ்யா குறித்துப் புரிந்து கொள்கிறாரோ.. அவ்வளவுக்கு அவ்வளவு அவர்களுக்கு நல்லது” என்று அவர் தெரிவித்தார்.

புதின் உடல்நிலை
ரஷ்ய அதிபர் புதின் உடல்நிலை குறித்து இணையத்தில் தொடர்ச்சியாகத் தகவல்கள் பரவி வருகிறது. அதற்கேற்ப அவர் கடந்த சில வாரங்களாகவே எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளவில்லை. ஒவ்வொரு ஆண்டும் அவர் டிச. மாதம் வருடாந்திர செய்தியாளர் சந்திப்பை நடத்துவார். ஆனால், இந்தாண்டு அதுபோல எந்தவொரு சந்திப்பும் நடக்கவில்லை. இதற்காக ரஷ்யா எந்தவொரு விளக்கத்தையும் தரவில்லை. இது சந்தேகங்களை மேலும் வலுவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
English summary
Volodymyr Zelensky says he doesn’t know If Vladimir Putin Is Still Alive or not: Ukraine war Zelensky says Russian leader might be not alive.
Story first published: Friday, January 20, 2023, 18:30 [IST]