சென்னை: அம்பத்தூர் அருகே அத்திப்பட்டு, ஐ.சி.எப்.காலனி அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர் ஜெயராம் (28). இவர் ரியல்எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், சென்னை, சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த தேவராஜ் (42) என்பவருக்கும் ரியல் எஸ்டேட் தொழில் தொடர்பாக பணம் கொடுக்கல், வாங்கல் இருந்துள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஜெயராம் தொழில் தொடர்பாக மயிலாப்பூர் சென்றபோது, அவரை தேவராஜ் தலைமையிலான 6 பேர் கும்பல் காரில் கடத்திச் சென்று வளசரவாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்தது. பின்னர் அவரது மனைவி சிவரஞ்சனியை போனில் அழைத்து மிரட்டி ரூ.5 லட்சம் பணம் கேட்டுள்ளனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிவரஞ்சனி இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ஜெயராமை மீட்கத் தனிப்படை அமைக்கப்பட்டது. சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் செல்போன் சிக்னல் மூலம் வளசரவாக்கத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த ஜெயராமை தனிப்படை போலீஸார் பத்திரமாக மீட்டனர்.
அவரைக் கடத்தியதாக சிந்தாதிரிப்பேட்டை, சிங்கண்ண செட்டித் தெருவைச் சேர்ந்த திவாகர்(40), அதே பகுதியைச் சேர்ந்த தேவராஜ்(40), பொன்னேரி ஹேமநாதன் (41), அதே பகுதி பாலாஜி (38), அயப்பாக்கம் ஸ்டீபன் ராஜ் (36), அத்திப்பட்டு தினேஷ் குமார் (23) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தப்பட்ட 3 மணி நேரத்தில் ஜெயராம் மீட்கப்பட்டுள்ளார்.