மதுரை: மதுரையில் வாகனத் தணிக் கையில் ஈடுபட்டிருந்த எஸ்ஐயை அரிவாளால் வெட்ட முயன்றும், குண்டு வீசியும் தப்பிய ரவுடி கைது செய்யப்பட்டார்.
மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் பணிபுரியும் எஸ்ஐ அழகுமுத்து, காவலர்கள் நாகசுந்தர், கணேஷ்பிரபு, பிரபாகர் ஆகியோர் மாடகுளம் பகுதியில் நேற்று முன்தினம் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக சென்ற காரை தடுத்து நிறுத்தினர்.
காரிலிருந்து இறங்கிய தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த ரவுடியான கூல்மணி என்ற மணிகண்டன்(26), எஸ்ஐ அழகுமுத்துவிடம் வாக்குவாதம் செய்தார். அவர் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது, தன் மீது வழக்குப் பதிவு செய்தது தொடர்பாக கோபமாக பேசிய கூல்மணி, காரில் வைத்திருந்த அரிவாளை எடுத்து எஸ்ஐயை வெட்ட முயன்றார்.
எஸ்ஐ விலகிக் கொண்டதால் உயிர் தப்பினார். கூல்மணியை போலீஸார் சுற்றிவளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது 2 பெட்ரோல் குண்டுகளை கூல்மணி வீசிவிட்டு தப்பி ஓடினார். தகவலறிந்த எஸ்.எஸ். காலனி காவல் ஆய்வாளர் பூமிநாதன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். ஆய்வாளர் தலைமையிலான தனிப் படை போலீஸார், தப்பி ஓடிய கூல்மணியை கைது செய்தனர்.