புதுடில்லி: இந்திய ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென் போராடி தோல்வியடைந்தார்.
டில்லியில், இந்திய ஓபன் ‘சூப்பர் 750’ பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், டென்மார்க்கின் ராஸ்மஸ் ஜெம்கே மோதினர். முதல் செட்டை 21–16 எனக் கைப்பற்றிய லக்சயா சென், இரண்டாவது செட்டை 15–21 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் ஏமாற்றிய இவர் 18–21 எனக் கோட்டைவிட்டார். ஒரு மணி நேரம், 20 நிமிடம் நீடித்த போட்டியில் லக்சயா சென் 21–16, 15–21, 18–21 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
செய்னா தோல்வி: பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் செய்னா நேவல், சீனாவின் சென் யு பெய் மோதினர். இதில் ஏமாற்றிய செய்னா 9–21, 12–21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
ஆண்கள் இரட்டையரில் இந்தியாவின் கிருஷ்ணா பிரசாத், விஷ்ணுவர்தன் ஜோடி, பெண்கள் இரட்டையரில் திரிசா, காயத்ரி கோபிசந்த் ஜோடி தோல்வியடைந்தன.
சாத்விக்சாய்ராஜ் காயம்: ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில், ‘நடப்பு சாம்பியன்’ இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, சீனாவின் லியு யு சென், ஓ ஜுவான் யி ஜோடியை சந்திக்க இருந்தது. ஆனால் சாத்விக்சாய்ராஜின் இடது பக்க இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டதால் கடைசி நேரத்தில் இந்திய ஜோடி விலகியது. இதனையடுத்து சீன ஜோடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
Advertisement