கொழும்பு: கடனில் மூழ்கியுள்ள இலங்கை, சர்வதேச நிதியத்திடம் ரூ.21,000 கோடி கடன் பெறத் தேவையான நிதி உத்தரவாதங்களை இந்தியா வழங்கி உதவி இருப்பதாக கொழும்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. இதிலிருந்து மீள சர்வதேச நிதியத்திடம் ரூ.21,000 கோடி கடன் கேட்டு அந்நாட்டு அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த கடனை தர ஏற்கனவே இலங்கைக்கு கடனளித்த நாடுகள் நிதி உத்தரவாதம் அளிக்க சர்வதேச நிதியம் உத்தரவிட்டது.
இந்நிலையில், 2 நாள் பயணமாக வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று காலை கொழும்பு புறப்பட்டுச் சென்றார்.

அங்கு, இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து பேசிய ஜெய்சங்கர், அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.  இதன் பின், அதிபர் ரணில் முன்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜெய்சங்கர், ‘‘இந்த கடினமான தருணத்தில் இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவை வெளிப்படுத்துவதே எனது கொழும்பு பயணத்தின் முதன்மை நோக்கமாகும். இலங்கை விவகாரத்தில் இந்தியா மற்ற எந்த நாட்டிற்காகவும் காத்திருக்காமல், முதல் நாடாக உதவ முன்வந்தது.

இந்த ஆண்டிலும் அதே உணர்வுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எனவே, சர்வதேச நிதியத்திடம்  கடன் பெற இலங்கைக்கு தேவையான அனைத்து நிதி உத்தரவாதங்களையும் இந்தியா வழங்கி உள்ளது. சர்வதேச கடன் வழங்கும் அமைப்புகளும் இலங்கைக்கு கடன் வழங்குவதில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’’ என்றார்.

* இந்தியாவுக்கு நன்றி
இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி அளித்த பேட்டியில், ‘‘நாங்கள் பொருளாதார சிக்கலில் இருந்து ஓரளவுக்கு மீண்டதற்கு முக்கிய காரணம் இந்திய அரசு அளித்த உதவிகள் தான். இதற்காக இந்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார். இதே போல, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவும் ஜெய்சங்கரிடம் இந்தியாவின் உதவிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *