கள்ளக்குறிச்சி: ஆரோவில்லில் நிலத்தகராறு சம்பந்தமாக வெளிநாட்டவர்கள் மீது ஆரோவில் போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் கடந்த சிலவருடங்களுக்கு முன்பு ஆரோவில்லில் 2 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளார். அந்த இடம் ஆரோவில்லுக்கு சொந்தம் என சில ஆரோவில் வாசிகள் ( வெளிநாட்டினர்) கூறி வந்தனர். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டு பிரச்சினையாக மாறியது.
அப்போது சில வெளிநாட்டினர், சுப்பிரமணிமற்றும் அவரது வேலையாட்க ளுக்கு கொலை மிரட்டல் விடுத்து பயங்கர ஆயுதத்தால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து 22 வெளிநாட்டவர் மற்றும் உள்ளூர் வாசிகள் மீது வானூர் போலீஸாரிடம் புகாரளித்தும், நட வடிக்கை எடுக்க வில்லை.
இதைத்தொடர்ந்து சுப்பிரமணி வானூர் நீதித்துறை நடுவரிடம் முறையிட்டுள்ளார். அதன்பேரில் வானூர் நீதித்துறை நடுவர், வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து தற்போது ஆரோவில் போலீஸார் 22 வெளி நாட்டவர்கள் உள்பட 32 பேர் மீது கொலை மிரட்டல் மற்றும் பயங்கர ஆயுதத்தால் தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆரோவில்லில் முதன் முறையாக வெளிநாட்டினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.