
அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால், மருத்துவ உதவியாளர்கள் சிகிச்சை அளிக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டார பகுதிகளான, தென்னம நாடு, கண்ணதங்குடி மேலையூர், கண்ணதங்குடி கீழையூர், செல்லம்பட்டி என 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த மருத்துவமனையை நம்பியுள்ளன. இந்த மருத்துவமனையில் இரவு நேரங்களில் போதிய மருத்துவர்கள் இல்லை என கூறப்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் அவசர பிரிவுகளில் மருத்துவர்கள் இல்லாததால், மருத்துவ உதவியாளர்களே சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதையும் படிக்க | மகரவிளக்கு பூஜை நிறைவு: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு
இந்நிலையில், கண்ணதங்குடி கீழையூரை சேர்ந்த சங்கர் என்பவர் காலில் அடிபட்டு சிகிச்சைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால், அங்கு மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாததால் உடல் கூறாய்வு செய்யும் உதவியாளர்கள் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். இந்த காட்சிகளை அவரது உறவினர்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இது தற்போது வைரலாகி வருகிறது.
அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மருத்துவர்கள் இல்லாததால் சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தஞ்சாவூருக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளதாகவும் எனவே அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படுவதற்கு முன் ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் பணிபுரிவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.