தோரணமலையில் தைப்பூசத்தை ஒட்டி 2023 பிப்ரவரி-5-ம் தேதி அதிகாலை 6 மணிக்கு தொடங்கி, மகா ஸ்கந்த ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு சங்கல்பித்தால் உங்கள் வேண்டுதல்கள் யாவும் ஒரு மண்டல காலத்துக்குள் நிறைவேறும் என்பது நிச்சயம்.

தைப்பூசமும் முருகன் வழிபாடும் சங்க காலம் தொட்டே நடைபெற்று வரும் ஒரு முக்கிய வழிபாடு என்கிறது தமிழர் வரலாறு. முருகன் வழிபாடு தமிழ்ச்சமூகத்தின் தொன்மையான வழிபாடு. தொன்றுதொட்டு பூசத் திருநாளில் முருகப்பெருமானை வழிபடும் வழக்கம் இருந்து வந்துள்ளது. பூச நாளில் ‘வேலன் வெறியாட்டு’ என்ற முருக வழிபாடு, ஆண், பெண் என்ற இருபாலரும் வேல் பிடித்து ஆடிய செய்திகளை சங்கத் தமிழ் தகவல்கள் கூறுகின்றன.
தைப்பூச நன்னாளில் வேல்மாறல் பூஜை, திருப்புகழ் மகாமந்திர பூஜை, மகா ஸ்கந்த ஹோமம் போன்றவற்றை செய்வதும் கலந்து கொள்வதும் மன விருப்பங்களை நிறைவேற்ற உதவும் என்கிறார்கள் பெரியோர்கள்.
முருகப்பெருமானுக்கு 16 விதமான காவடிகள் எடுப்பது இந்நாளைய விசேஷம். பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, சர்க்கரை காவடி, தீர்த்தக் காவடி, பறவைக் காவடி, மச்சக்காவடி, மயில் காவடி என ஒவ்வொரு காவடிக்கும் தனித்தனியே பலன்கள் உண்டு என்பர் ஆன்றோர்கள். முருகப்பெருமான் வள்ளியை மணந்ததால் தெய்வயானை ஊடல் கொள்ள, அதை முருகப்பெருமான் தீர்த்த நன்னாள் இது என்பதால், திருவூடல் விழா இந்நாளில் முருகப்பெருமான் ஆலயங்களில் நடைபெறும். முருகப்பெருமானுக்கு உகந்த நாளான தைப் பூச திருநாளில் முருகன் குடியிருக்கும் கோயில்களுக்குப் பாதயாத்திரை செல்வதும், காவடி சுமப்பது, வேல்குத்துதல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களையும் செய்வது பக்தர்களின் வழக்கம். இந்நாளில் வேண்டி வழிபடும் அன்பர்கள் கல்வி, செல்வம், ஞானம் மூன்றிலும் சிறந்து விளங்குவர் என்பது ஐதிகம். இப்படி பல விசேஷங்கள் கொண்டது இந்த தைப்பூச நன்னாள்.
அதேபோல தைப்பூசமும் சித்தர்கள் வழிபாடும் சிறப்பானது என்கின்றன ஞானநூல்கள். அந்த வகையில் சித்தர்களின் தபோவனமாக உள்ள தோரணமலை சிறப்பினும் சிறப்பானது எனலாம். படுத்திருக்கும் யானை போல மலை இருப்பதால் வாரண மலை என்றும், மேற்கு தொடர்ச்சி மலைகளின் வாயிலாக இருப்பதால் தோரண மலை என்றும், முருகப்பெருமான் அமர்ந்து கொள்ள ஞான சக்தியே மலையாக உருக்கொண்டதால் காரண மலை என்றும் இதற்கு அநேக திருநாமங்கள்.
அகத்திய மாமுனி, தேரையர் தொடங்கி மகாகவி பாரதியார் வரை எண்ணற்ற ஞானியர் உள்ளம் கவர்ந்த இந்த தெய்வீக மலை அதிசயங்கள் பல நிறைந்தவை. பல சித்தர்களும் ஞானியரும் உலவும் மலையிது. சிவ – சக்தி திருமணத்துக்கு தென்னகம் வந்த அகத்தியப் பெருமான் தோரணமலையின் அழகையும் வளத்தையும் கண்டு இங்கேயே தங்கிவிட்டார். அதுமட்டுமா, முருகப்பெருமானின் ஆலோசனையால் இங்கே ஒரு மாபெரும் மருத்துவச்சாலையை உருவாக்கி பல சீடர்களை உருவாக்கினார். அப்போது மலைமீது அகத்தியருக்குக் காட்சி தந்த குகை, இன்றும் முருகப்பெருமான் வீற்றிருக்கும் கருவறையாக உள்ளது. அகத்தியரின் மாணாக்கராக இங்கு வசித்துவந்த தேரையரின் ஜீவசமாதியும் இங்கேயே உள்ளது இங்கு.




நவகோடி சித்தர்களின் தபோவனமாக விளங்கிய இந்த மலை, பிறகு களையிழந்து போக, ஆதிநாராயணன் என்ற அன்பரின் மூதாதையர் காலத்தில் இம்மலை மீண்டும் பொலிவு பெற்றது. அவர்கள் கனவில் தோன்றிய முருகப்பெருமான், தோரணமலை மலைமீது குகையில் தாம் இருப்பதாக வெளிப்படுத்த, அங்கு மீண்டும் வழிபாடுகளும் விழாக்களும் உருவாகின. பிறகு ஆதிநாராயணன் காலத்தில் இந்த மலையும் ஆலயமும் பிரசித்தி பெற்றது. அவரின் ஓயாத உழைப்பால் பல சந்நிதிகளும், மலைக்கு செல்ல திருப்படிகளும் உருவாகின. மலைமீது அபூர்வமான குகை முருகப்பெருமான் ஆலயமும், மலையடிவாரத்தில் வேறொரு முருகப் பெருமான் ஆலயமும் உருவானது. இங்கு ஸ்ரீவல்லப விநாயகர், நவகிரக சந்நிதி, ஸ்ரீ குருபகவான்,ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ சரஸ்வதி, சப்த கன்னிமார்கள், ஸ்ரீ கன்னிமாரம்மன், நாகர்கள் போன்ற சந்நிதிகளும் உள்ளன. சித்தர்கள் உலாவும் இந்த தலத்தில் தைப்பூச விழா வெகு சிறப்பானது என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404