வேலூர்: வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலூர் மாவட்டத்தில் 2023ம் ஆண்டு எருதுவிடும் விழா நடத்துவது தொடர்பாக அரசினால் தெரிவித்துள்ள கட்டுபாடுகள், நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகளை விழாக்குழுவினர் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கலெக்டர் தலைமையில் பல்வேறு நிலைகளில் விழா குழுவினர்களுடன் கூட்டம் நடத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டன. அதன்படி கடந்த 16ம் தேதி முதல் எருது விடும் விழா தொடங்கி நடைபெற்று வருகின்றன. இருப்பினும், நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை விழாகுழுவினர் சரியான முறையில் கடைபிடிக்காமல் அலட்சியத்துடன் விழா நடத்தி வருவதாக புகார்கள் வரப்பெறுகின்றன. மேலும், அச்சு மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் வரப்பெறும் செய்திகள் மற்றும் காணொலி வாயிலாக அரசால் வழங்கப்பட்ட அறிவுரைகள் மீறப்படுவது தெரியவருகிறது. அரசு விதிகளின்படி இரட்டை தடுப்பான்கள் அல்லது மாவட்ட அளவிலான கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டவாறு குறைந்தபட்சம் 8 அடி உயரத்திற்கான ஒற்றை தடுப்பான்கள் அமைக்கப்படவில்லை.எருது ஓடுதளத்தில் அதிகபட்சமாக குறிப்பிடப்பட்ட 25 தன்னார்வ தொண்டர்களுக்கு அதிகமாகவும், ஏராளமான பொதுமக்களும், எருது உரிமையாளர்களும் குழுமி எருதுகள் இலகுவாக ஓடுவதற்கு தடையாக உள்ளனர். விழா ஆரம்பம் மற்றும் முடிக்கும் நேரங்கள் நிபந்தனைகளில் உள்ளவாறு கடைபிடிக்கப்படுவதில்லை. வருவாய் மற்றும் காவல் துறையினரின் அறிவுரைகளை கடைபிடிப்பதுமில்லை, விழாகுழுவினர் அவற்றினை கண்டுகொள்வதும் இல்லை. அவ்வப்போது காளைகள் பொதுமக்கள் பகுதியில் எதிர்பாராதவிதமாக புகுந்து பொதுமக்களுக்கு காயம் மற்றும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன. கோவிந்தரெட்டிபாளையத்தில் நேற்று முன்தினம் ஒரு சுற்றுக்கு மேல் காளைகளை ஓடவிட்டதால் அந்த காளை இறந்துவிட்டதாக விசாரணையில் தெரியவருகிறது. இதுதொடர்பாக விரிவான விசாரணை செய்து அறிக்கை அனுப்பும்படி சம்பந்தப்பட்ட ஆர்டிஓக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் அரசு வழங்கியுள்ள உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து விழா குழுவினர் அந்தந்த கிராமங்களில் மிகவும் பாதுகாப்பான முறையிலும், பொதுமக்கள் மற்றும் எருதுகளுக்கு பாதுகாப்பான முறையில் விழாக்கள் நடத்திகொள்ள சம்மந்தப்பட்ட விழா குழுவினர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் பட்சத்தில் எருதுவிடும் விழா தடை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.