மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா தகுதி பெற்றார். 2வது சுற்றில் கனடாவின் லெய்லா பெர்னாண்டசுடன் (20 வயது, 39வது ரேங்க்) மோதிய கார்சியா (29 வயது, 4வது ரேங்க்) 7-6 (7-5), 7-5 என நேர் செட்களில் கடுமையாக போராடி வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 1 மணி, 52 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு 2வது சுற்றில் செக் குடியரசு வீராங்கனை லிண்டா ஃபுருஹ்விர்தோவா (17வயது, 80வது ரேங்க்), ‘வைல்டு கார்டு’ சிறப்பு அனுமதி மூலம்  வாய்ப்பு பெற்ற ஆஸ்திரேலியாவின் கிம்பெர்லி பிர்ரெல் (24 வயது, 166வது ரேங்க்) மோதினர்.

அதில் அபாரமாக செயல்பட்ட லிண்டா 6-3, 6-2 என நேர் செட்களில் வென்று 3வது சுற்றுக்குள் நுழைந்தார். லிண்டா கடந்த ஆண்டு சென்னையில் நடந்த ‘சென்னை ஓபன்’ டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் 2015 முதல் கிம்பெர்லி ஆஸி. ஓபன் தவிர்த்து வேறு எந்த கிராண்ட் ஸ்லாம் போட்டியிலும் விளையாடியதில்லை. முன்னணி வீராங்கனைகள் பெலிண்டா பென்சிக் (சுவிஸ்), அரினா சபலென்கா (பெலாரஸ்),  கரோலினா பிளிஸ்கோவா (செக் குடியரசு), எலிஸ் மெர்டென்ஸ் (பெல்ஜியம்), கேதி வோலிநெட்ஸ்(அமெரிக்கா) ஆகியோரும் 3வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

முன்னணி வீரர்கள் அதிர்ச்சி: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் கேஸ்பர் ரூட் (நார்வே), அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி), டீகோ ஸ்வார்ட்ஸ்மென் (அர்ஜென்டீனா), டெய்லர் ஃபிரிட்ஸ் (அமெரிக்கா) ஆகியோர் அதிர்ச்சி தோல்வி அடைந்த நிலையில், செர்பிய நட்சத்திரம் ஜோகோவிச், ரஷ்யாவின் ருப்லேவ், திமித்ரோவ் (பல்கேரியா), பாடிஸ்டா அகுத் (ஸ்பெயின்) ஆகியோர் 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி – சாகேத் மைனேனி ஜோடி 6-7 (5-7), 7-6 (7-4), 3-6 என்ற செட் கணக்கில் ஆண்ட்ரியாஸ் மைஸ் (ஜெர்மனி) – ஜான் பீர்ஸ் (ஆஸ்திரேலியா) ஜோடியிடம் போராடி தோற்றது. இப்போட்டி 2 மணி, 45 நிமிடத்துக்கு நீடித்தது.

* அசத்திய சானியா!
இதுதான் தனது கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டி என்று ஏற்கனவே அறிவித்துவிட்ட இந்திய வீராங்கனை சானியா மிர்சா (36), ஆஸி ஓபனில் கஜகஸ்தான் வீராங்கனை அன்னா டானலினா உடன் களமிறங்கி உள்ளார். இந்நிலையில், நேற்று நடந்த முதல் சுற்றில் டால்மா (ஹங்கேரி) –  பெர்னார்டா பெரா (அமெரி க்கா) ஜோடியுடன் மோதிய சானியா ஜோடி 6-2, 7-5 என நேர் செட்களில் வென்று 2வது சுற்றுக்குள் நுழைந்தது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *