நடிகை அபர்ணா நடித்த `தங்கம்’ என்ற மலையாள சினிமாவின் புரமோஷன் நிகழ்ச்சி மற்றும் மாணவர் சங்க திறப்புவிழா ஆகிய நிகழ்ச்சிகள் கடந்த 18-ம் தேதி எர்ணாகுளம் அரசு சட்டக்கல்லூரியில் நடைபெற்றது. இதில் நடிகை அபர்ணா பாலமுரளி, நடிகர் வினீத் சீனிவாசன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டார். மேடையில் இருந்த நடிகையை வரவேற்கும் விதமாகப் பூங்கொத்து கொடுத்த கல்லூரி மாணவர் ஒருவர் நடிகை அபர்ணா பாலமுரளியின் கைகளைப் பிடித்து இழுத்து இருக்கையில் இருந்து எழுப்பினார். மேலும் அவரை மேடைக்கு முன் பக்கம் அழைத்து வந்து தோளில் கைபோட்டபடி செஃபி எடுக்க முயன்றார். ஆனால், நடிகை அபர்ணா மாணவன் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, “என்னடா இது சட்டக்கல்லூரி இல்லையா” எனக்கேட்டபடி மீண்டும் இருக்கையில் அமர்ந்தார். மேடைக்கு வந்த அந்த மாணவனின் செயலால் அபர்ணா பாலமுரளி அதிர்ச்சியடைந்தார். மேடையில் இருந்தவர்களும் எதுவும் சொல்லமுடியாத அவஸ்தையில் அமர்ந்திருந்தனர்.

இதையடுத்து நிகழ்ச்சி நடக்கும்போதே மீண்டும் மேடைக்கு வந்த அந்த மாணவன், “நான் வேறு எண்ணத்தில் அப்படி நடந்துகொள்ளவில்லை. நான் உங்கள் ஃபேன் என்பதால் போட்டோ எடுக்க முயன்றேன்” எனக்கூறி வருத்தம் தெரிவித்ததுடன் அபர்ணாவிடம் மீண்டும் கைகுலுக்க முயன்றார். ஆனால் அபர்ணா கை கொடுக்காமல் தவிர்த்தார். அடுத்ததாக நடிகர் வினீத் சீனிவாசனுக்கு கைகொடுத்தார் மாணவர், “ஒன்றும் பிரச்னை இல்லை போ” என கூறி அவரும் கை குலுக்க மறுத்துவிட்டார். எர்ணாகுளம் சட்டக்கல்லூரியில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலானது.