Loading

சான் பிரான்சிஸ்கோ: விலங்குகளிடம் நடத்திய சோதனை வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, மனித மூளைக்குள் சிப் பொருத்தி விரைவில் சோதனை நடத்தப்படும் என எலான் மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம் அறிவித்துள்ளது.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டிவிட்டர் நிறுவனங்களின் உரிமையாளரான எலான் மஸ்க், மனித மூளை குறித்து ஆராய்ச்சி நடத்தும் நியூராலிங்க் எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். மனித மூளையை கணினியுடன் இணைத்து செயல்பட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பல்வேறு அமெரிக்க நிறுவனங்களில் நியூராலிங்கும் ஒன்று.

இந்நிலையில், விலங்குகளைத் தொடர்ந்து மனித மூளைக்குள் சிப்பை பொருத்தி சோதனை நடத்தும் அடுத்த கட்டத்திற்கு நியூராலிங்க் நிறுவனம் முன்னேறி இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அவரது வீடியோ பதிவில், ‘‘விலங்குகளின் மூளையில் நியூராலிங்க் சிப் பொருத்தி நடத்திய சோதனைகள் வெற்றி அடைந்துள்ளன. அதைத் தொடர்ந்து, மனித மூளைக்குள் சிப் பொருத்தி விரைவில் சோதனை நடத்த உள்ளோம். இதற்கான சோதனை அறிக்கைகள் அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் வழங்கி உள்ளோம். அனுமதி கிடைத்ததும், இன்னும் 6 மாதத்தில் மனித மூளைக்குள் சிப் பொருத்தி சோதனை நடத்தப்படும். எங்களின் முதல் 2 இலக்குகள், சிப் மூலமாக பார்வை திறனை வழங்க வேண்டும். கை, கால் முடங்கியவர்கள் செயல்பட உதவ வேண்டும்’’ என கூறி உள்ளார்.

இந்த சிப்பானது, சிறிய நாணயம் போன்று இருக்கும். அது மண்டை ஓட்டில் அமைக்கப்படும். சிப்பில் உள்ள மெல்லிய கம்பிகள் நேரடியாக மூளைக்குள் செல்லும். இதனை கணினியுடன் இணைத்து, மூளையின் செயல்படாத நியூரான்களை செயல்பட வைக்க முடியும். இதனால் மூளை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மீண்டும் பழையபடி செயல்பட வைக்க முடியும். பார்கின்சன் போன்ற நரம்பியல் நோய்களுக்கும் இது தீர்வாகும். தீவிர முதுகு தண்டுவட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முழு உடல் செயல்பாட்டையும் நியூராலிங்க் மூலம் சாத்தியப்படுத்த முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள். எனவே, மூளைக்குள் சிப் பொருத்தி நடத்தப்படும் சோதனை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

* இந்த சிப் முதலில் குரங்குகளின் மூளையில் பொருத்தி சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் குரங்குகளால் சில அடிப்படை வீடியோ கேம்களை தாமாக விளையாட முடிந்ததாக நியூராலிங்க் ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.
* இந்த சிப் மூலம் மனிதன் தன் மூளையில் நினைக்கும் விஷயத்தை கணினியில் உடனடியாக செயல்படுத்திட முடியும்.
* இந்த சிப் தயாரானதும், தானே ஒரு சிப்பை தனது மூளைக்குள் பொருத்திக் கொள்ள இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *