Loading

India

bbc-BBC Tamil

By BBC News தமிழ்

|

எடப்பாடி பழனிசாமி

BBC

எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினை ‘பொம்மை முதலமைச்சர்’ என்று குறிப்பிட்டு தன்னுடன் விவாதிக்கத் தயாரா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிக்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி.

ஆளும் திமுக அரசைக் கண்டித்து கோவையில் இன்று சிவானந்தா காலனியில் அதிமுக சார்பில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கோவையில் நடைபெற்று வரும் முக்கிய சாலை பணிகளை விரைந்து முடித்திடவும், அதிமுக ஆட்சியின் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றிடமும், மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, கட்டுமான பொருட்கள் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்தும் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு கோவையில் நடைபெறும் அதிமுகவின் போராடம் ஒன்றில் முதல் முறையாக கலந்து கொண்டார்.

கோவை மட்டுமல்லாது திருப்பூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அதிமுக உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

இந்த போராட்டத்தில் பேசிய அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, “கோவைக்கு அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட அனைத்து திட்டங்களையும் திமுக முடக்கி வருகிறது. தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அதிமுகவினர் மீது பொய் வழக்குகளை திமுக அரசு போட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தை திமுக முற்றிலுமாக புறக்கணித்துவிட்டது. அடுத்த தேர்தலில் மக்கள் திமுகவிற்கு தக்க பாடம் புகட்டுவார்கள். அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அடுத்த தேர்தலில் அதிமுக அமோகமாக வெற்றி பெறும்” என்று கூறினார்.

அதன் பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சட்டமன்ற தேர்தலில் பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியைப் பிடித்த திமுக தற்போது அதை நிறைவேற்ற முடியாமல் திணறி வருகிறது. கோவை மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அனைத்து திட்டங்களையும் திமுக செயல்படுத்தாமல் உள்ளது. திமுக அரசு கோவையை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது,” என்று குறிப்பிட்டார்.

G square நிறுவனத்துக்காக வெள்ளலூர் பேருந்து நிலையம் மாற்றப்படுகிறதா?

வெள்ளலூரில் பேருந்து நிலையம் அமைக்க அதிமுக ஆட்சியில் பணிகள் தொடங்கப்பட்டது. தற்போது திமுகவுக்கு நெருக்கமான G square என்ற நிறுவனம் கோவையில் 200 ஏக்கர் நிலங்களை வாங்கியுள்ளது. அதற்காக பேருந்து நிலையத்தை மாற்றப் போவதாக சொல்கிறார்கள். திமுக அரசு இந்த முடிவை கைவிட வேண்டும்.

கோவையில் விமான நிலைய விரிவாக்கம், அவிநாசியில் உயர்மட்ட மேம்பாலம் எனப் பல்வேறு திட்டங்களை அதிமுக தான் வழங்கியுள்ளது. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை திறந்து வைத்து புகழ் தேடப் பார்க்கிறார்கள்.

அதே போல் அன்னூர் தொழில் பூங்கா அமைக்க 3,800 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார்கள். இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். ஆயிரக்கணக்கான விவசாயிகளை பாதிக்கும் இந்த திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும்.

அதிமுக

BBC

அதிமுக

மின் கட்டணத்தை இப்போது உயர்த்தக் கூடாது

கொரோனாவால் நலிவடைந்த தொழில்கள் தற்போது தான் மீண்டு வருகிற நிலையில் மின் கட்டணத்தை 52% வரை திமுக அரசு உயர்த்தியுள்ளது. இதனால் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்கள் எல்லாம் சீரடைந்த பிறகு தான் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும்.

அதே போல் சொத்து வரி உயர்வும் மக்களை கடுமையாக பாதித்துள்ளது இரும்பு, சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால் கட்டுமானத் துறை தேக்க நிலையை அடைந்துள்ளது.

அதிமுக ஆட்சியில் இருந்ததை விட சிமெண்ட் விலை 140 ரூபாய் உயர்ந்துள்ளது. ஆவின் பால் லிட்டருக்கு 12 ரூபாய் விலை உயர்த்தியுள்ளார். மகளிர் உதவி தொகை, சிலிண்டருக்கு மானியம் என எந்த தேர்தல் வாக்குறுதிகளையும் திமுக நிறைவேற்றவில்லை.

பொய் வழக்குகளை சட்டப்படி சந்திப்போம்

திமுக அரசின் தோல்விகளை அம்பலப்படுத்தும் முன்னாள் அமைச்சர்கள் அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டு வருகிறார்கள். அதிமுகவை முடக்க ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் முடியாது. பொய் வழக்குகளை சட்டப்படி சந்தித்து வெற்றி பெறுவோம்.டான் டீ தேயிலை தோட்ட நிலங்களை வனத்துறைக்கு மாற்றப்போவதாக அரசு எடுத்திருக்கும் முடிவு தொழிலாளர் விரோதமானது. அதை எதிர்த்து போராடும் அதிமுகவினரையும் கைது செய்கிறீர்கள். இந்த முடிவை கைவிட வேண்டும்.

நீட் ரத்து தேர்வை முதல் கையெழுத்தில் ரத்து செய்வோம் என்றார்கள். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. அதிமுக அரசு செய்த அதே நடவடிக்கையை தான் திமுக செய்து வருகிறது. அதிமுக ஆட்சியில் அமைச்ச்சர்கள் கேரளாவுக்கே சென்று ஆனைமலையாறு – நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் திமுக அரசு அதை கிடப்பில் போட்டுள்ளது. அதை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சியின் போது மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரிடம் உதயநிதி ஸ்டாலின் நடித்த கலகத் தலைவன் படம் எப்படி உள்ளது என விசாரித்துக் கொண்டிருக்கிறார்.

மாநிலத்திற்கு தேவையான விஷயங்களை கேட்காமல் தன்னுடைய மகன் படத்தின் வசூல் பற்றி விசாரித்து கொண்டிருக்கிறார். அமைச்சர் மக்கள் யாரும் திரையரங்கை விட்டு வெளியேறவில்லை என்கிறார்.

ஏனென்றால் நீங்கள் மக்களை தியேட்டரில் வைத்து பூட்டி வைத்துள்ளீர்கள்.

‘பொம்மை முதலமைச்சர்’ மாநிலத்தின் நலனைப் பற்றி யோசிக்காமல் தன் மகனின் திரைப்பட வசூல் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார்.

திமுக மட்டும் தான் ஆளுநரை சந்திக்குமா?

அதிமுக

BBC

அதிமுக

18 மாத திமுக ஆட்சியில் நிறைய முறைகேடுகள் நடந்துள்ளன. அதனைப் பற்றி ஆளுநரிடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் முதல்வர் எங்களை குறை கூறுகிறார்.

திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது 10 முறை ஆளுநரை சந்தித்து எங்கள் மீது புகார் அளித்தீர்கள். நீங்கள் ஆளுநரை சந்திக்கலாம், நாங்கள் சந்திக்கக் கூடாதா?

அதிமுக தலைமையில் பிரம்மாண்ட கூட்டணி

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைகிறது. கொலை, கொள்ளை சம்பவங்கள் மற்றும் போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. ஆனால் முதல்வர் ‘எங்களின் வயிறு எரியுது’ எனச் சொல்கிறார். முதல்வரே எங்களின் வயிறு எரியவில்லை. மக்களின் வயிறு தான் எரிகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

“திமுகவின் ஆட்சிக்கு மக்களே முடிவுரை எழுதுவார்கள். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் அதிமுக தலைமையில் அமையவிருக்கும் பிரமாண்ட கூட்டணி வெற்றி பெறும்,” என்று அவர் தெரிவித்தார்.

‘பொம்மை முதலமைச்சர்’ என விமர்சனம்

எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர்

BBC

எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர்

“பத்து ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகம் பாழடைந்துவிட்டதாக முதல்வர் சொல்கிறார். அதிமுக ஆட்சியில் தமிழகம் மிளிர்ந்தது. 2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் பற்றி எங்கு வேண்டுமானாலும் விவாதிக்க நான் தயார். பொம்மை முதலமைச்சர் என்னுடன் விவாதிக்க தயாரா?” என்று அவர் கெள்வி எழுப்பினார்.

உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த அதிமுகவினரின் வாகனங்களை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. அதிமுகவினரை முடக்க நினைத்தால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும். நானும் முதல்வராக காவல்துறையை கவனித்து வந்தேன் என்பது உங்களுக்கு தெரியும். ஆட்சி மாறினால் காட்சியும் மாறும் என்பதை முதல்வர் நினைவில் கொள்ள வேண்டும்.

இன்று கோவையில் நடைபெறுவது போல தமிழ்நாடு முழுவதும் 9ஆம் தேதி அனைத்து பேரூராட்சிகளிலும் 11ஆம் தேதி அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் 12ஆம் தேதி மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளிலும் திமுக அரசைக் கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தும்” என்றார்.

உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்துப் பேசிய பிறகு எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil

English summary

Opposition leader Edappadi Planiswami kick-started the AIADMK’s fast protest against the ruling DMK’s poor governance in Coimbatore on Friday

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *