Loading

திருவையாறு பகுதியில் சம்பா பயிரிடப்பட்ட நெல் வயல்களில் நெற்பயிரை அழித்து, சாலை அமைக்கு பணி நடைபெற்றது. அதனை எதிர்த்தும், பயிரை காக்கவும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். “ஒரு விவசாயியான எங்க தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ, கள நிலவரத்தை தெரிந்து கொள்ள காட்டிய ஆர்வத்தை விவசாயிகளான எங்க பிரச்னையை தீர்க்க வரவில்லை” என வேதனை தெரிவித்தனர்.

வயலுக்குள் சாலை அமைக்கும் பணி

பெரம்பலூர் டு மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு நகர பகுதி வழியாக செல்கிறது. திருவையாறில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக ரூ. 191 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி மணக்கரம்பை, அரசூர், காட்டுக்கோட்டை, கண்டியூர், கீழதிருப்பூந்துருத்தி, கல்யாணபுரம், திருவையாறு உள்ளிட்ட ஊர்கள் வழியாக புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சாலை அமைக்கும் பணிக்கு கீழதிருப்பூந்துருத்தி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் சாலை அமைப்பதை நிறுத்த கோரி கடந்த 30-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர். ஒரு நாளைக்கு ஐந்து விவசாயிகள் வீதம் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர். இந்நிலையில் சம்பா நடவு செய்யப்பட்ட நெல் வயலில் நெற்பயிரை அழித்து சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

சாலை அமைக்கும் பணி

“குழந்தை மாதிரி வளர்த்த பயிருக்கு உயிருடன் சமாதி கட்டுகிறீர்களே இது நியாயமா, உங்களுக்கு மனசாட்சி இல்லையா” என கேட்டு பணியை நிறுத்த வலியுறுத்திய விவசாயிகளை போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இந்த நிலையில் இன்றும் வழக்கம் போல் பணிகள் தொடங்கியது. சாலை அமைப்பதற்காக ஐந்துக்கும் மேற்பட்ட லாரிகளில் கிராவல் மண் எடுத்து வரப்பட்டது.

இரண்டுக்கும் மேற்பட்ட ஜே.சி.பி இயந்திரங்கள் மண்ணை நிரவி கொண்டிருந்தன. இதனை தொடர்ந்து விவசாயிகள் அந்த இடத்தில் திரண்டனர். தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், “ஒரு மரத்தை அழிப்பதற்கு கூட உரிமை இல்லாத நிலையில், 60 நாள்கள் ஆன பயிரை மண்ணை போட்டு புதைக்கிறீர்களே, அதற்கு விவசாயிகளையும் உயிருடன் புதைத்து விடலாம்” என்றவர், உடனே பணியை நிறுத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நெல் வயல்

இது குறித்து விவசாயிகள் தரப்பில் பேசினோம், “திருவையாறு சுற்று வட்டாரப் பகிதிகளில் உள்ள விளை நிலங்கள் வளமாக விளைச்சல் தரக்கூடியது. குறிப்பாக கண்டியூர், கீழதிருபந்துருத்தி உள்ளிட்ட ஊர்கள் முப்போகம் விவசாயம் நடைபெறக்கூடிய பகுதி. அரசு புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்ததுமே எங்கள் எதிர்ப்பை பதிவு செய்தோம். நெல், வாழை, தென்னை, வெற்றிலை உள்ளிட்ட பயிர்கள் வீணாகும் எங்களுக்கு சாலை வேண்டாம் என திட்டவட்டமாக தெரிவித்தோம்.

பயிரையும், உணர்வையும் மதிக்காத அதிகாரிகள் அதனை காதில் வாங்கவில்லை. இந்த நிலையில் ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் சாலை அமைக்கும் பணியை தொடங்கியது. இதில் உச்சபட்சமாக சம்பா நடவு செய்யப்பட்டு 60 நாள்கள் ஆன பயிரில் மண்ணை கொண்டு வந்து கொட்டினர். ஜே.சி.பி இயந்திரத்தை உள்ளே இறக்கி மண்ணை நிரவி சாலை அமைத்தனர். எங்களுக்கு நெஞ்சுக்குள் ஈட்டியை விட்டு ஆட்டுவது போல் இருந்தது.

விவசாயிகள்

உரிய முறையில் தகவல் தெரிவிக்கவில்லை. போதுமான இழப்பீடும் வழங்கவில்லை. திருவையாறு நகரத்தில் சாலை ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே போதும். புறவழிச்சாலையே தேவையிருக்காது. அதை கவனத்தில் எடுத்து கொள்ளாமல் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும் என்பதற்காக சாலை போடுவதிலே குறியாக இருந்தனர்.

இந்த நிலையில் பி.ஆர். பாண்டியன் உள்ளிட்ட விவசாய அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் வந்து போராட்டம் நடத்தினர். எங்க தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ., துரை.சந்திரசேகரன் என்ன ஏதுன்னு கூட வந்து பார்க்கவில்லை. பயிரோட உயிர் போகுதேனு விவசாயிகள் உயிரை கொடுத்து போராடும் நிலையில் கூட, அதிகாரிகளுக்கு போன் செய்து என்ன நடக்குதுனு நிலவரத்தை கேட்டாரே தவிர ஒரு விவசாயியான அவரும் எங்கள் துயரத்தை தீர்க்க முன் வரவில்லை.

விவசாயிகளுடன் பி.ஆர்.பாண்டியன்

ஜே.சி.பி, லாரி உள்ளிட்டவற்றை வெளியேற்றினால் மட்டுமே போராட்டத்தை நிறுத்துவோம் என கூறிய நிலையில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எங்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். இதன் மூலம் சாலை பணியும், எங்கள் போராட்டமும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எங்களை வாழ வைக்கும் விவசாய நிலம் தான் எங்களுக்கு முக்கியம், சாலை தேவையில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்றனர்.

அதிகாரிகள் தரப்பில் பேசினோம், “விவசாயிகளின் கோரிக்கை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட இருக்கிறது. அதுவரை சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தபட இருக்கிறது” எனத் தெரிவித்தனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *