கத்தார்: இங்கிலாந்துடனான கால்பந்து போட்டியில் தேசிய கீதத்தை பாடாமல் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு அளித்த ஈரான் கால்பந்து வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து வருகிறது. இதில் க்ரூப் ’பி’ பிரிவில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து – ஈரான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் தொடக்க நிகழ்வில் இரு அணிகளின் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன.

தங்கள் நாட்டில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தேசிய கீதத்தை பாட மறுத்தனர் ஈரான் வீரர்கள். ஈரான் நாட்டின் தேசிய கீதங்கள் ஒலித்தபோது வீரர்கள் தேசிய கீதத்தை பாடாமல் மவுனமாக நின்றனர். இன்னும் சிலர் வீரர்கள் தலைகுனித்து கொண்டனர்.

மேலும் மைதானத்துக்கு வந்த ஈரான் ஆதரவாளர்களும் ஈரான் தேசிய கீதத்தை பாட மறுத்தனர். இதன் காரணமாக ஈரானின் தேசிய தொலைகாட்சி போட்டியின் நேரடி ஒளிபரப்பை நிறுத்தியது. இதுகுறித்து ஈரான் அணிதரப்பில் விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “ நாங்கள் எங்கள் நாட்டின் நிலைமையை உணர்ந்திருகிறோம். எங்கள் நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. இந்த சூழலில் நாங்கள் அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். “ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹிஜாப் போராட்டத்துக்கு ஆதரவளித்த ஈரான் வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

போராட்ட பின்னணி: ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்புப் பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். கடந்த செப்டம்பர் 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி (22) என்ற இளம்பெண் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளனர்.

மேலும், அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டதால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றார். இதையடுத்து கடந்த செப்டம்பர் 16-ம் தேதி மாஷா அமினி உயிரிழந்தார் மாஷாவின் மரணம் தற்போது ஈரானில் பெரும் போராட்டம் ஏற்படக் காரணமானது. இப்போராட்டத்தில் 200க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *