Loading

டெங்கு, மலேரியா போன்ற ஏராளமான நோய்கள் கொசுக்கடியால் பாதிக்கப்படுவது உண்டு. ஆனால் கொசுக் கடித்ததால் ஒருவர் 30 அறுவை சிகிச்சைகள் செய்துக் கொண்டதோடு, கோமாவுக்கே சென்றார் என்றால் நம்ப முடிகிறதா? அப்படியான பகீர் சம்பவம் ஒன்று ஜெர்மனியைச் சேர்ந்த 27 வயது இளைஞருக்கு நடந்திருக்கிறது.

ஜெர்மனியின் ரோடர்மார்க் பகுதியைச் சேர்ந்த செபாஸ்டியன் ரோட்ஸ்சேக் என்ற நபர்தான் கொசுக்கடியால் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி ஐ.சி.யுவில் அனுமதிக்கப்பட்டதோடு கிட்டத்தட்ட நான்கு வாரங்களுக்கு மேலாக கோமாவில் இருந்திருக்கிறார்.

image

கொசுக்கடியால் எப்படி கோமா வரை செல்ல முடியும் என்ற கேள்வி எழலாம். ஆனால் செபாஸ்டியனை கடித்தது ஏசியன் டைகர் என்ற வகையைச் சேர்ந்த கொசு என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த கொசு கடித்ததால் செபாஸ்டியனின் ரத்தம் நச்சாக மாறியதோடு, கல்லீரல், சிறுநீரகம், இதயம் மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகளையும் தீவிரமாக பாதிப்படையச் செய்திருக்கிறது.

இதனால் உடல்நலம் குன்றிப்போய் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த செபாஸ்டியனின் இடது தொடையில் சீழ் உருவானதால் தோல் மாற்று அறுவை சிகிச்சை உட்பட இதுவரை அவருக்கு 30 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருக்கிறதாம்.

image

இது தொடர்பாக டெய்லி ஸ்டார் செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள செபாஸ்டியன், “நான் வெளிநாடுகளுக்கு எங்கும் செல்லவில்லை. கடந்த 2021ம் ஆண்டு கோடை காலத்தில்தான் நடந்தது. திடீரென கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு உடல்நிலை சரியில்லாமல் போனது. அதன் பிறகுதான் படுத்தப்படுக்கையானேன்.

பாத்ரூம் கூட போகமுடியாமல் போனது. முறையாக சாப்பிடவும் முடியவில்லை. எல்லாம் முடிந்துவிட்டது என்றே எண்ணினேன். என் இடது தொடையில் இருந்த கட்டி சீழ் பிடித்து போயிருந்தது. மருத்துவரை அணுகிய போது திசு பரிசோதனை செய்ததில் செரட்டியா மார்செசென்ஸ் என்ற பாக்டீரியா தொற்றால் என் தொடை பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.

image

இதனையடுத்து இத்தனைக்கும் ஏசியன் டைகர் கொசு கடித்ததன் விளைவுதான் என யூகித்து அதற்கான சிகிச்சையளிக்க மருத்துவர்கள் சிறப்பு நிபுணர்களை அணுகினார்கள். பலகட்ட மருத்துவ சிகிச்சைக்கு பிறகு எனது கால் விரல்கள் இரண்டும் வெட்டப்பட்டது. ஆனால் உயிரோடு இருப்பதே பரவாயில்லை என்ற நிலையில் உள்ளேன். உடலில் சிறிதாக எந்த மாற்றம் இருந்தாலும் உடனடியாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுவிடுங்கள். ஏனெனில் சிறிய உயிரினத்தால் உயிரே போகும் நிலை ஏற்படலாம்.” எனக் கூறியிருக்கிறார்.

ஆகவே `பட்டுனு அடிச்சா பொட்டுனு கொசு செத்துவிடும்’ என்று சினிமா வசனங்களை வாழ்க்கையில் பிரயோகிக்காமல், கொசுவோ அல்லது வேறு ஏதேனும் உயிரினம் கடித்து அதனால் உடலில் ஏதும் புதிய மாற்றங்கள், பாதிப்புகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்குரிய சிகிச்சையை பெற்றுக் கொள்வதே சாலச்சிறந்தாக அமையும் என்பதே செபாஸ்டியனின் நிலை நமக்கு உணர்த்தும் பாடமாக இருக்கும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *