அரியலூர்: அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம், உட்கோட்டை அருகேயுள்ள மாளிகை மேட்டில் நடைபெற்ற அகழாய்வுப் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை இரவு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சோழப்பேரரசின் மாமன்னர் ராசேந்திர சோழன், கங்கை வரை படையெடுத்து வெற்றி பெற்றதன் நினைவாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராக நிறுவி ஆட்சி செய்தார். மேலும், சோழப்பேரரசின் கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக உலகப் புகழ் பெற்ற பெருவுடையார் கோயிலையும் ஆலயத்தை அங்கு கட்டினார்.

யுனோஸ்கோ இதனை பாதுகாக்கப்பட்ட புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராசேந்திர சோழன் மற்றும் அவருக்கு பின்னால் வந்த சோழ மன்னர்களின் அரண்மனை இருந்ததாக கூறப்படும் மாளிகை மேடு பகுதியில் கடந்த 1980 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வுப் பணிகள் தமிழக அரசால் நடைபெற்றது.

அப்போது, அங்கு அரண்மனை இருந்ததற்கான அடையாளங்கள் மற்றும் தொல்லியல் பொருள்கள் கிடைத்துள்ளன. இதில், அரண்மனை இருந்தற்கான செங்கல் சுவர்கள், சீன நாட்டு மண்பானை ஓடு, சிகப்பு மற்றும் கருப்பு நிறத்திலான ஓடுகள், செப்பு காசுகள், மணி, இரும்பிலான ஆணி, கூரை ஓடு என பல்வேறு பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள காப்பகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அதன் பிறகு, மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக்குழு அனுமதி அளித்த நிலையில், கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கி செப்டம்பர் மாதம் முடிவடைந்தது.

இதில், ராஜேந்திரசோழன் வாழ்ந்ததற்கான அடையாளமாக அரண்மனையில் மூன்றடுக்கு செங்கல் சுவர்கள், மண் பானை, உடைந்த தங்க காப்பின் ஒரு பகுதி, ஆணிகள், சுடுமண் முத்திரை, உறை கிணறுகள், தந்தத்தினாலான பகடை, உருவ பொம்மைகள், வளையல்கள், காதணிகள், முதுமக்கள் தாழி, கருப்பு சிவப்பு பானை ஓடுகள், சுமார் 60 அடி ஆழத்தில் 1.8 சென்டிமீட்டர் உயரமும் 1.5 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட யானை தந்ததிலான அழகான பொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பணிகள் நடைபெற்று வரும் மாளிகை மேடு அகழாய்வுப் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை இரவு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாளிகை மேடு அகழாய்வுத் தளம் குறித்தும், அதில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருள்கள் குறித்தும் தொல்லியல் துறையினர் முதல்வருக்கு விளக்கினர்.

இந்த ஆய்வின் போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, சா.சி.சிவசங்கர், அன்பில் மகேஷ்பொய்யாமொழி, தங்கம்.தென்னரசு, கணேசன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் அரியலூர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க.கண்ணன், பெரம்பலூர் ம.பிரபாகரன், ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *