புதுச்சேரி,-புதுச்சேரி வரவு செலவு கணக்கு விவாதத்தில், இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் குழு, எதிர்கட்சியை அழைக்காதது ஜனநாயக விரோத செயல் என தி.மு.க., குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து எதிர்கட்சி தலைவர் சிவா, கவர்னர், முதல்வர், சபாநாயகர் மற்றும் இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு:
புதுச்சேரியில் அரசு துறைகள், நிறுவனங்கள் ஆண்டுதோறும் முறையாக வரவு-செலவு கணக்கு தணிக்கை செய்வதில்லை. இதனால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது. அதனை தவிர்க்கும் வகையில், அரசு நிதியை செலவு செய்யும் அமைப்புகளின் வரவு செலவு கணக்கை சரிபார்க்கும் இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் மூலம் குழு விவாதம் நடந்துள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் ஆலோசனை பெற வேண்டிய இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் குழு விவாதத்தில், எதிர்க்கட்சி தலைவர், உறுப்பினர்களை புறக்கணித்தது ஜனநாயக விரோதம்.
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., தலைவராகவுள்ள பொது கணக்கு குழு தலைவர் அழைக்கப்பட்டுள்ளார். ஆனால், மதிப்பீட்டுக்குழு தலைவர் அழைக்கப்படவில்லை. இதை பார்க்கும் போது, திட்டமிட்டு எதிர்க்கட்சி தலைவர், எம்.எல்.ஏ.,க்களை புறக்கணித்தது போல் உள்ளது.
எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களை புறக்கணித்து முக்கிய குழு விவாதம் நடத்துவது நிச்சயம் அரசு நிர்வாகத்தை செம்மைப்படுத்த உதவாது. ஆளுங்கட்சியோடு, எதிர்க்கட்சிகளும் பங்கேற்றால் தான் விவாதம் சிறப்பாக இருப்பதோடு நல்ல தீர்வும் கிடைக்கும்.
மாறாக ஆளுங்கட்சியே பங்கேற்று விவாதித்தால் ஆட்பேசனையின்றி தீர்மானங்கள் மட்டுமே நிறைவேறும். இது தற்போது அரசு துறைகள், நிறுவனங்களில் நடக்கும் நிதி நிர்வாக சீர்கேட்டிற்கு வழிவகுக்கும். எதிர்க்கட்சி தலைவர், எம்.எல்.ஏ.,க்களை அழைத்து இதுபோன்ற விவாதங்கள் நடத்த முன்வர வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement