புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையில் 2.13 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டுவந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அரசு தலைமை மருத்துவமனை, தொடர்ந்து அதே இடத்தில் செயல்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், மீண்டும் மருத்துவமனை அதே இடத்தில் செயல்பட நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தோம். அதன்படி, போதிய மருத்துவர்கள் ஊழியர்களை நியமனம் செய்து, மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக இன்னும் ஒரு மாத காலத்துக்குள் மீண்டும் செயல்படுத்துவோம்.

மாணவி பிரியா மரணத்தில் தமிழக அரசு வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொண்டது. இதில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான், இந்த ஒழுங்கு நடவடிக்கைக்கு அனைத்து மருத்துவர்களும் உறுதுணையாக இருந்திருக்கின்றனர்.
இது குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருக்கிறார். அவர் ஆட்சியிலிருந்திருந்தால் என்ன செய்திருப்பார், என்பதை அவரே தெரிவிக்க வேண்டும். தற்போது, அவர் மருத்துவர்களுக்கு ஆதரவாகப் பேசுகிறாரா?… மருத்துவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தவறு என்கிறாரா… அல்லது யார் மீது அவர் நடவடிக்கை எடுக்கச் சொல்கிறார். யார் மீது குற்றம் சாட்டுகிறார் என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

அறுவை சிகிச்சையில் சம்பந்தப்பட்ட இரண்டு மருத்துவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அது குறித்து காவல்துறை முடிவு எடுத்து நடவடிக்கை மேற்கொள்ளும். மதுரை மருத்துவமனையில் சிறுவனுக்கு மாற்றி சிகிச்சை அளித்து விட்டதாக வந்த செய்தி தவறானது. சிறுவனின் பெற்றோர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலேயே சிறுவனின் உடல்நலத்திற்காக அந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.
அரசு மருத்துவமனைகளில் நாள் ஒன்றுக்கு ஆறு லட்சத்துக்கும் அதிகமான பொதுமக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், ஒரு சிலர் அரசு மருத்துவத்தைக் குறைத்துக் கூறுவதற்காக நுழைந்திருப்பது வருத்தத்துக்குரிய செயலாக இருக்கிறது. இதில் ஊடகம், சமூக வலைதளத்தில் இருப்பவர்கள் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும்.