திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இவ்விழாவின் 5-ம் நாளான நேற்று காலையில் மோகினி அலங்காரத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
நேற்றிரவு கஜ வாகன சேவை நடைபெற்றது. இதனையொட்டி, நேற்று திருமலையில் இருந்து ஏழுமலையான் (மூலவர்) அணியும் தங்க காசு மாலை யானை மீது திருச்சானூருக்கு கொண்டு வரப்பட்டது. கோயில் அருகே இதனை தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, தலை மீது சுமந்து வந்து திருச்சானூர் அர்ச்சகர்கள் மற்றும் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். பின்னர் அந்த காசு மாலை தாயாருக்கு அணிவிக்கப்பட்டு கஜ வாகன சேவை நடைபெற்றது.