Loading

தோஹா: உலகத் தரவரிசையில் 2வது இடத்தில் இருக்கும் பெல்ஜியம் அணி,  41வது இடத்தில் இருக்கும் கனடாவை  1-0 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது. உலக கோப்பை கால்பந்து தொடரில்  எப் பிரிவு லீக் ஆட்டத்தில் நேற்று  பெல்ஜியம்-கனடா அணிகள் மோதின. முன்னணி அணி என்பதால் பெல்ஜியத்துக்கு வெற்றி எளிதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் முதல் நிமிடத்தில் இருந்தே கனடா வீரர்கள், பெல்ஜிய கோல் பகுதியை முற்றுகையிட ஆரம்பித்தனர்.  பெல்ஜிய வீரர்  கர்ரஸ்கோ செய்த  தவறால் மஞ்சள் அட்டை பெற்றார். கூடவே கனடா கோரிய மறு ஆய்வு மூலம் அந்த அணிக்கு ‘பெனால்டி கிக்’ வாய்ப்பு கிடைத்தது. அதை கோலாக்க முயன்ற கனட வீரர் டேவிசின் முயற்சியை  பெல்ஜியம் கோல்கீப்பர் திபவுட் கோர்டய்ஸ் அழகாக தடுத்து விட்டார். கனடாவின் பல முயற்சிகளை  திபவுட் காலி செய்தார்.

அதே நேரத்தில் பெல்ஜியம் வீரர்கள் அவ்வப்போது மேற்கொண்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை. இத்தனைக்கும் பந்து பெரும்பாலும் அவர்கள் வசம்தான் இருந்தது. முதல் பாதி முடிய இருந்த 44வது நிமிடத்தில்  சக வீரர் ஆல்டர்விரெல்ட்   தட்டித் தந்த பந்தை    பெல்ஜிய வீரர் மிச்சி பாட்சுவாய் அழகாக கோலாக்கினார். அதனால் முதல் பாதியில் பெல்ஜியம் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது.

தொடர்ந்து நடந்த 2வது பாதியில் இரு அணிகளும் சமபலத்தை வெளிப்படுத்த ஆட்டத்தில் அனல் பறந்தது. மொத்த ஆட்டத்தில்  கனட வீரர்கள் 21முறையும்,  பெல்ஜிய வீரர்கள் 9 முறையும் கோலடிக்க  முயன்றனர்.  பெல்ஜிய கோல் கீப்பர் திபவுட் சாமர்த்தியதால் கனடாவின் போராட்டங்களும், முயற்சிகளும் வீணாகின. அதனால் முடிவில் பெல்ஜியம்  1-0 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது.  

ரசிகர்கள் கோப்பை
உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு இடையில் ரசிகர்களுக்கும் கால்பந்து  போட்டி நடக்க உள்ளது.  நவ.29ம் தேதி முதல் டிச.2ம் தேதி வரை 4 நாட்கள்  நடைபெறும் போட்டியில்   ரசிகர்கள் அணிகள் பங்கேற்கலாம். ஒவ்வொரு அணியிலும் 7 முதல் 10ரசிகர்கள் இருக்க வேண்டும். ஒரே அணியில் பெண் ரசிகைகள், ஆண்  ரசிகர்கள்  இடம் பெறக் கூடாது. குறிப்பாக உலக  கோப்பையில் விளையாடும் நாடுகளை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.  வெற்றி பெறும் அணிகளுக்கு ‘ரசிகர்கள் கோப்பை’ வழங்கப்படும்.

விவிஐபி ஜாகீர் நாயக்
இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான ஜாகீர் நாய்க்,  உலக கோப்பை  கால்பந்து தொடக்கவிழாவில் விவிஐபியாக  பங்கேற்றது, இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் தனது கவலையை கத்தாரிடம் தெரிவித்தது.  அதற்கு கத்தார், ‘ஜாகீருக்கு நாங்கள் முறையான அழைப்பு ஏதும் அனுப்பவில்லை.  இந்தியா, கத்தார் இடையே தூதரக உறவை கெடுக்க மற்ற நாடுகள் தவறான தகவல்களை  பரப்புகின்றன’ என்று கத்தார் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரெனால்டோவுக்கு தடை
ரசிகர் ஒருவரின் செல்போனை தட்டி விட்டதற்காக போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியனோ  ரொனால்டோவுக்கு நேற்று ரூ.50லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. கூடவே 2 ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இது கால்ந்து ரசிகர்களிடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம்  ஏப்.9ம் தேதி இங்கிலாந்தில்  மான்செஸ்டர் யுனைடட் அணிக்காக விளையாடிய போது நடந்தது. அந்த சம்பவத்துக்கு உலக  கோப்பையில் தடையா? என்று கால்பந்து உலகம் பரபரப்பானது. ஆனால் நேற்று  விதிக்கப்பட்ட தடை உலக கோப்பை போட்டிகளுக்கு பொருந்தாது. மான்செஸ்டர்  யுனைடட் கிளப் அணியில் இருந்து விலகியுள்ள ரொனால்டோ இனி வேறு கிளப்களுக்காக  விளையாடும் போது இந்த தடை அமலுக்கு வரும்.

ஜெர்மனி அரசியல்வாதி
ஓரின சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக ஐரோப்பிய கால்பந்து சங்கங்கள் வலியுறுத்தும்  ‘ஒன் லவ்’ கைபட்டையை வீரர்கள் அணிய கத்தார் அரசும், கால்பந்து கூட்டமைப்பான  பிஃபாவும் தடை விதித்துள்ளது. இந்நிலையில்  ஜெர்மனி-ஜப்பான் இடையிலான ஆட்டத்தை கண்டு களித்த பிஃபா தலைவர் ஜியானி அருகில் ஜெர்மனி  அரசியல்  பிரமுகர் நான்சி ஃபயிசெர் ‘ஒன் லவ்’ பட்டையை அணிந்து போட்டியை ரசித்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *