தமிழக பா.ஜ.க ஓ.பி.சி அணியின் தலைவர் திருச்சி சூர்யா சிவா, தமிழக பா.ஜ.க-வின் சிறுபான்மையினர் அணித் தலைவராக இருக்கும் டெய்சி சரணை அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு ஆபாசமாகப் பேசியும், அவருக்குக் கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியிருக்கும் ஆடியோ வெளியாகி பா.ஜ.க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தை கண்டித்து காயத்ரி ரகுராம் தனது ட்விட்டரில், “சொந்தக் கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்… இந்த ஹைனாக்களுக்கு அழகு பார்க்க கட்சியில் மாநிலப் பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு. திமுக ஸ்லீப்பர் செல்கள்தான் நம்மைச் சேதப்படுத்துகின்றன. அவர்கள் தங்கள் திராவிட மாடலை இங்கே காட்டுகிறார்கள். இதை நான் கண்டிக்கிறேன். இந்த நபர்களை போலீஸார் கைதுசெய்ய வேண்டும். மற்றும் கட்சி அவரை உடனடியாக நீக்க வேண்டும். குரல் அச்சுறுத்தலைக் கேட்டு இதயம் உடைந்தது. டெய்சிக்கு வலிமை, என் ஆறுதல் மற்றும் ஆதரவு” எனப் பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, “காயத்ரி ரகுராம் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருவதால், கட்சியில் அவர் வகித்துவரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்துக்கு நீக்கப்படுகிறார்” என தலைமை அறிக்கைவிட்டது.

இதற்கு, “குற்றச்சாட்டுக்கு ஆளான திருச்சி சூர்யா மீது ஏழு நாள் விசாரணைக்கான அவசாகம் கொடுக்கப்படுகிறது. அந்த தவறை சுட்டிக் காட்டியதற்காக என்னிடம் எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் ஆறு மாத கால இடை நீக்கம் செய்திருப்பது எந்த விதத்தில் நியாயம்…” என பத்திரிகையாளர்களை சந்தித்த காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பி இருந்தார்.

சூர்யா சிவா, டெய்சி சரண்

இதனிடையே செல்போனில் ஆபாசமாக பேசிய விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க பாஜக, விசாரணை கமிட்டி முன்பு டெய்சி, திருச்சி சூர்யா ஆகியோர் ஆஜரானார்கள். திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் நேற்று விசாரணை நடந்தது. மாநில துணை தலைவர் கனகசபாபதி, மாநில செயலாளர் மலர்கொடி ஆகியோர் விசாரணை அலுவலர்களாக செயல்பட்டனர். குழுவின் முன்பு, டெய்சி, திருச்சி சூர்யா ஆகியோர் நேற்று (25-11-2022) காலை தனித்தனியாக ஆஜராகினர். நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கிய விசாரணை மதியம் 1.30 மணி வரை நடந்தது. இந்த விசாரணை அறிக்கை, கட்சியின் தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும் என விசாரணை குழுவினர் கூறினர்.

விசாரணை குழுவில் ஆஜராகி விளக்கம் அளித்துவிட்டு வந்த டெய்சி அளித்த பேட்டியில், “சமூக வலைதளத்தில் பரவிய ஆடியோவால் பாஜக-வில் இவ்வாறு நடக்கிறதா என பலரும் விமர்சனம் செய்தனர். கட்சியில் எத்தனையோ நல்லவர்கள் இருக்கிறார்கள். மிகப்பெரிய சித்தாந்தத்தை கொண்ட கட்சி பாஜக. பெண் நிர்வாகிகளை அக்காள், அம்மா என அழைக்கும் கட்சி. ஏதோ ஒரு அசம்பாவித சம்பவம் நடந்ததால், எதிர்க்கட்சி உள்பட பலரும் விமர்சனம் செய்கிறார்கள். இதில் சம்பந்தப்பட்ட எங்கள் இருவரையும் கட்சி பெரியவர்கள் மற்றும் மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பேச வைத்தனர். நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசி, மன்னிப்பு கேட்டு, இந்த பிரச்னையை முடித்துக்கொள்ளலாம் என முடிவு செய்துள்ளோம். இதில், யாருடைய வற்புறுத்தலும் இல்லை. ஏதோ திருஷ்டி கண் பட்டதுபோல் இச்சம்பவம் நடந்துவிட்டது. நாங்கள் இருவரும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, ஒற்றுமையுடன் மீண்டும் கட்சி பணியில் தொடர்ந்து பயணிக்க உள்ளோம்” என்று கூறினார்.

திருச்சி சூர்யா பேசுகையில், “இந்த பிரச்னைக்கு முன்பு இருவரும் அக்காள், தம்பி என்ற வகையில்தான் பணியாற்றி வந்தோம். திடீரென ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டது. கட்சிக்கும், மாநில தலைமைக்கும் கட்டுப்பட்டு விளக்கம் கொடுத்துள்ளோம். இருவரும் சுமுகமாக செல்ல முடிவு செய்துள்ளோம். ஆபாசமாக பேசியது தவறுதான். இருவரும் மன்னிப்பு கேட்டுக்கொண்டோம். இதற்கு மேல் கட்சி எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவேன். கட்சியின் வெளிப்படைத்தன்மைக்கு இது உதாரணம். ஆனால் தி.மு.க அப்படி இல்லை. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பலர், இன்றைக்கு திமுக-வில் அமைச்சர்களாக உள்ளனர். திமுக எங்களை பார்த்து திருத்திக்கொள்ள வேண்டும்”என்றார்.

கமலாலயம்

இதனையடுத்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், “நடந்தவற்றை மறந்துவிட்டு சுமூகமாக செல்ல தமிழக பாஜக சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி, ஓபிசி அணியின் மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா விருப்பப்பட்டாலும் அந்த தொலைபேசி உரையாடல் சரி என்று நாமே ஒப்புக்கொள்வதை போல் ஆகிவிடும். ஒரு மாநில தலைவராக சில கடின முடிவுகளை எடுக்க வேண்டிய பொறுப்பும் எனக்கு உள்ளது. ஆகவே தமிழக பாஜக கட்சியின் ஓபிசி அணி மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளதை அவர் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறுமாத காலத்திற்கு நீக்கப்படுகிறார். கட்சியில் ஒரு தொண்டனாக கட்சியின் வளர்ச்சிக்கு அவர் பணியாற்றலாம். அவரின் நடவடிக்கைகளில் மாற்றம் கண்டால், அவர் மேல் எனக்கு மீண்டும் நம்பிக்கை வந்தால் பொறுப்பு அவரை தேடிவரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலைமை இவ்வாறு இருக்க காயத்திரி ரகுராமின் இடை நீக்கம் இந்த ஒரு விவகாரத்தை மட்டும் வைத்துதானா என்கிற கேள்வியோடு சில பா.ஜ.க மூத்த தலைவர்களிடம் பேசினோம். “கட்சிக்குள் பல கோஷ்டிகள் இருக்கின்றன. அதில் காயத்ரியும் ஒரு கோஷ்டி. அதில் கட்சியின் தலைமைக்கு எதிராக இருக்கும் நபர்களுடன் இணைந்து சில விஷயங்கள் முன்னெடுத்து வந்தார். கட்சியை தாண்டி அவரை எப்போதும் முன்னிலைப்படுத்திக் கொள்ளவே விரும்புகிறார். நிதானமாக இல்லாமல் கட்சிக்கு எதிராகவும், கட்சி கட்டுப்பாடுகளை மீறுவதையும் தொடர்ந்தார். ஒரு முறை சுட்டிக்கட்டலாம். தொடர்ந்து அதையே செய்து வரும் போது சமயம் பார்த்து அவரை இப்போது இடை நீக்கம் செய்திருக்கிறது தலைமை” என்கிறார்கள்.

காயத்ரி ரகுராம்

இன்னும் சில பா.ஜ.க நிர்வாகிகளோ, “இப்போது தமிழக பா.ஜ.க-வில் தனிமனித துதிப்பாடல் அதிகமாக இருக்கிறது. அதை காயத்ரி சுட்டி காட்டி இருக்கிறார். இந்த தலைமை வந்த புதிதில், காயத்ரி நிர்வகித்து வந்த அணியில் பெப்சி சிவா மீது நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார். ஆனால், பெப்சி சிவாக்கு காயத்ரி வகுத்த பொறுப்பு கொடுக்கப்பட்டது. அப்போதிலிருந்து தலைமைக்கும், காயத்ரிக்குமான உரசல் ஆரம்பமானது. இதனை தொடர்ந்து காயத்ரிக்கு எதிராக கட்சிக்குள்ளேயே அதிருப்தி எழ ஆரம்பித்தது. இதனால் பல இடங்களில், மேடைகளில் புறக்கணிக்கப்பட்டார் காயத்ரி. இப்போது கட்சியிலிருந்தும் இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்” என்கிறார்கள்.

இதற்கிடையே “கட்சியின் லட்சுமண ரேகையை தாண்டுபவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன். காயத்ரி ரகுராம் மீதான நடவடிக்கை வெறும் ஆரம்பம்தான். பொறுத்திருந்து பாருங்கள்” என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: