அரசியல் கட்சிகளின் பல்வேறு கோரிக்கைகளுக்குப் பிறகு, ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தமிழ்நாடு அரசு தடை விதித்து சட்ட மசோதாவைக் கொண்டுவந்தது. பின்னர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஆளுநர் ஆர்.என்.ரவி, மசோதாவில் கூறப்பட்ட தண்டனை விதிப்பது தொடர்பான அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதா என்று கேள்வியெழுப்பி, விளக்கம் தருமாறு அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

அதைத்தொடர்ந்து சட்ட மசோதாவின் காலம் வரும் 27-ம் தேதி முடியும் நிலையில், தற்போது ஆளுநரின் கேள்விக்கு விளக்கமளித்து அரசு கடிதம் அனுப்பியிருக்கிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “அவசர சட்டம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. மற்றவர்கள் வெறும் தடை மட்டும் தான் கொண்டுவந்தார்கள். நாம் தான் ஒழுங்குமுறை மற்றும் தடை என்று முதல்முறையாகக் கொண்டுவந்திருக்கிறோம். முகப்புரையில் அவ்வளவும் தெளிவாக, விளக்கமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.




சமீபத்தில் நடைபெற்ற அகில இந்திய சட்டத்துறை அமைச்சர்கள் மாநாட்டில், ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் முன்னிலையில், தமிழக அரசு இந்த சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது, நாங்கள் கொண்டுவந்தால் மட்டும்போதாது. எனவே ஒன்றிய அரசு முன்வந்து ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பொதுவான ஒரு சட்டத்தை இயற்றவேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறோம். அவர்களும் பரிசீலிப்பதாகக் கூறியிருக்கிறார்கள். ஆளுநரிடம் நேரம் கேட்டு ஏற்கெனவே கடிதம் கொடுத்துவிட்டோம். ஒருவாரம் ஆகிவிட்டது. கடிதம் அங்கேயே இருக்கிறது. அழைத்தால் போவோம். அழைக்கவில்லையென்றால் போகமுடியாது அல்லவா” என்று தெரிவித்தார்.
மேலும், அண்மையில் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க அனுமதி வழங்கி ஆளுநர் அவரை சந்திருந்தார். அதுகுறித்து பத்திரிகையாளர் ஒருவர், எதிர்க்கட்சித் தலைவருக்கு நேரம் ஒதுக்கும் ஆளுநர், முக்கிய சரத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை இதை எப்படிப் பார்க்கிறீர்கள் என்று கேள்வியெழுப்பினார். இதற்கு அமைச்சர் ரகுபதி, “அது ஆளுநருக்கே வெளிச்சம்!” என்று பதிலளித்தார்.