Loading

லண்டன்: இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்ட பிரிட்டன் உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 2 வார கால அவகாசம் கோரி, லண்டன் உயர் நீதிமன்றத்தில் நீரவ் மோடி மனு தாக்கல் செய்துள்ளார்.

குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரியான நீரவ் மோடி, பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தார். பணத்தை திருப்பிச் செலுத்தாததால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வங்கித் தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அவர் பிரிட்டனுக்கு தப்பி ஓடினார். நீரவ் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவர் ஆஜராவதற்கு ஏற்ப, அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புமாறு இந்திய அரசு, பிரிட்டன் அரசுக்கு கோரிக்கை விடுத்தது. மேலும், பிரிட்டன் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, நீரவ் மோடி கைது செய்யப்பட்டார்.

நீரவ் மோடி தற்போது லண்டனில் உள்ள வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தன்னை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பக்கூடாது என நீதிமன்றத்தில் தொடர்ந்து வாதிட்டு வந்தார். நீரவ் மோடிக்கு மனநிலை சரியில்லை என்றும், அவரை இந்தியாவுக்கு அனுப்ப முயன்றால் அவர் தற்கொலை செய்துகொள்வார் என்றும் வாதிடப்பட்டது. எனினும், மருத்துவ சோதனைகளின் அடிப்படையில் அவரது மனநிலை நன்றாக இருப்பதையும், தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் அவர் இல்லை என்பதையும் உறுதி செய்த உச்ச நீதிமன்றம், அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப இம்மாத தொடக்கத்தில் உத்தரவிட்டது. இது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் தொடர் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில், பொது முக்கியத்துவம் வாய்ந்த சட்டத்தின் அடிப்படையில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், எனவே அதற்கேற்ப தனக்கு இரண்டு வார கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் கோரி லண்டன் உயர் நீதிமன்றத்தில் நீரவ் மோடி மனு தாக்கல் செய்துள்ளார். ஒருவேளை அவரது மனு உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் நிராகரிக்கப்படுமானால், அடுத்ததாக அவர் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர வாய்ப்பு இருப்பதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *