மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் குறித்த விவகாரத்தில் நீதிமன்றம் விளக்கம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருப்பது முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இதேபோல், குறிப்பிட்ட காலத்துக்குள் திட்டத்தை முடிக்காத நிலையில் ரூ.700 கோடிக்கு மேல் கூடுதல் செலவினம் ஏற்பட்டிருப்பதாகவும், இது வரக்கூடிய காலங்களில் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, தி.மு.க செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி , “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை’ அறிவிப்பு வெளியிட்ட போது வட இந்தியாவிலும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பணிகள் முடிந்து செயல்பாட்டிற்கு வந்துவிட்டது. ஆனால், இங்கே ஒரு சுவரைக் கூட எழுப்பவில்லை. ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதி போதாது இன்னும் ரூ.2 ஆயிரம் கோடியாவது ஒதுக்க வேண்டும் என்று கேட்கிறோம். ஆனால், சொற்ப அளவிலேயே நிதி ஒதுக்கியிருக்கிறார்கள். 2026-ல் பணிகள் முடிக்கப்படும் என்று மத்திய அரசு சொல்கிறது. அப்போதைய காலகட்டத்தில் தற்போது ஒதுக்கிய நிதியை விடக் கூடுதல் நிதி செலவாகும். இப்போதிருக்கும் நிதியை வைத்து உடனடியாக பணிகளை ஆரம்பித்து முடிக்க வேண்டும். தமிழ்நாடு மக்கள் மீதான அக்கறையின்மை தான் இந்த தாமதத்திற்குக் காரணம். தி.மு.க அரசு கிண்டி கிங்ஸ் மருத்துவமனை அறிவிப்பை வெளியிட்டு ஒரு ஆண்டு தான் இருக்கும். ஆனால், இப்போது பணிகள் முழுமையாக முடிவடையப்போகிறது” என்றார்.
தமிழக பா.ஜ.க துணைத் நாராயணன் திருப்பதி, “2015ல் இந்த திட்டத்தை அறிவித்தபோது திட்டமதிப்பீடு ரூ.1,200 கோடி. தோப்பூரில் இடத்தேர்வு 2018ல் தான் நடந்தது. அதன்பின்னர், 2021ல் ரூ.777 கோடி கூடுதலாக அறிவித்திருக்கிறார்கள். இந்த கூடுதல் நிதி என்பது 2026 வரையில் அதாவது 5 வருட காலதாமதத்திற்கும் சேர்த்து தான். ஒருவேலை காலத்திற்கேற்ப மாறினாலும் அதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்கும். 2026க்குள் பணிகளை முடிக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது” என்று முடித்துக்கொண்டார்.