புதுடில்லி: சச்சின் பைலட் சதிகாரர். அவருக்கு கட்சி மேலிடம் முதல்வர் பதவி வழங்காது என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே மோதல் வலுத்து வருகிறது. இதனை தீர்க்க கட்சி மேலிடம் எவ்வளவு முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் அசோக் கெலாட்டை நிறுத்த சோனியா குடும்பம் முடிவு செய்தது.

அதற்காக அவர் முதல்வர் பதவி விலக வேண்டிய சூழ்நிலையில், கெலாட் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கினர். இதனால், அவர் போட்டியில் இருந்து விலகினார். மல்லிகார்ஜூன கார்கே தலைவராக பதவி ஏற்றுள்ளார். போர்க்கொடி தூக்கியவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சச்சின் பைலட் கோரிக்கை விடுத்துள்ளார்.

துரோகம்
இந்நிலையில் அசோக் கெலாட் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: சச்சின் பைலட் சதிகாரர். அவரை கட்சி மேலிடம் முதல்வராக்க முடியாது. அவருக்கு 10 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு கூட இல்லை. கட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்து துரோகம் இழைத்தவர்.
பா.ஜ., ஆதரவுடன் ஆதரவாளர்கள் மூலம் பைலட் ஆதரவு எம்எல்ஏ.,க்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அதற்காக ரூ.5 கோடி முதல் 10 கோடி வரை பணம் கொடுக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
பொருத்தமற்றது

சச்சின் பைலட் கூறுகையில், சதிகாரர் என அசோக் கெலாட் கூறுகிறார். இந்த குற்றச்சாட்டு பொய்யானது. பா.ஜ.,வுக்கு எதிராக ஒற்றுமையாக போராட வேண்டிய நேரத்தில் தேவையில்லாதது. இந்த நேரத்தில் இப்படி பேசுவது மூத்த தலைவருக்கு பொருத்தமற்றது. இவ்வாறு அவர் கூறினார்.

பயம் வேண்டாம்
இது குறித்து ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், அசோக் கெலாட்டின் வார்த்தைகள் எதிர்பாராதவை. நாம் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். அசோக் கெலாட்டும், பைலட்டும் காங்கிரசுக்கு தேவை. கட்சியில் உள்ள சில கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்படும்.
பயப்படும் சூழ்நிலை தேவையில்லை. தலைவர்கள் தங்கள் மனதில் உள்ளவற்றை கூறுகின்றனர். இருவரும் மூத்த தலைவர்கள். எந்த தீர்மானமாக இருந்தாலும், தனிநபர்களை காட்டிலும் கட்சி தான் முக்கியம். அசோக் கெலாட்டின் வார்த்தைகள் ஆச்சர்யம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்