பெங்களூரு: ‘லிஸ்ட் ஏ’ (ஒருநாள்) போட்டியில் அதிக ரன் எடுத்து உலக சாதனை படைத்தார் ஜெகதீசன். 141 பந்தில் 277 ரன் விளாசினார். தமிழக அணி 506 ரன் குவித்தது, முதல் விக்கெட்டுக்கு 416 ரன் எடுக்கப்பட்டது என ஒரே போட்டியில் மூன்று உலக சாதனை நிகழ்த்தப்பட்டன. 

இந்தியாவின் ‘லிஸ்ட் ஏ’ (50 ஓவர்), விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடர் தற்போது நடக்கிறது. பெங்களூருவில் நடந்த ‘குரூப் சி’ போட்டியில் தமிழகம், அருணாசல பிரதேச அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற அருணாசல பிரதேசம் பீல்டிங் தேர்வு செய்தது.

ஜெகதீசன் கலக்கல்

தமிழக அணிக்கு நாராயணன் ஜெகதீசன், சாய் சுதர்சன் ஜோடி துவக்கம் தந்தது. கடந்த நான்கு போட்டிகளில் முதல் விக்கெட்டுக்கு 177, 233, 276, 151 ரன் குவித்த இந்த ஜோடி நேற்றும் மிரட்டியது. முதல் விக்கெட்டுக்கு 231 பந்தில் 416 ரன் குவித்து சாதனை படைத்த நிலையில் சுதர்சன் 154 ரன்னில் (102 பந்து) அவுட்டானார். 

மறுபக்கம் சிக்சர் மழை பொழிந்த ஜெகதீசன், 76 பந்தில் சதம் கடந்தார். இதையடுத்து தொடர்ந்து 5 சதம் விளாசிய உலகின் முதல் வீரர் என சாதனை படைத்தார். 

114 பந்தில் இரட்டை சதம் எட்டிய இவர், 141 பந்தில் 277 ரன் (15 சிக்சர், 25 பவுண்டரி) குவித்து, உலக சாதனை படைத்தார். விஜய் ஹசாரே தொடரில் இரட்டை சதம் அடித்த ஆறாவது இந்தியர் ஆனார். 

தமிழக அணி 50 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 506 ரன் குவித்து புதிய சாதனை நிகழ்த்தியது. பாபா அபராஜித் (31), கேப்டன் பாபா இந்திரஜித் (31) அவுட்டாகாமல் இருந்தனர். 

இமாலய வெற்றி

கடின இலக்கைத் துரத்திய அருணாசல பிரதேச அணிக்கு மணிமாறன் சித்தார்த், சிம்ம சொப்பனமாக இருந்தார். டோரியா (14), கேப்டன் கம்ஷாவை (17), சித்தார்த் சுழலில் சிக்கினர். மதன் பால் (11), சாய் கிஷோரிடம் போல்டானார். மற்ற வீரர்கள் யாரும் ஒற்றை இலக்க ரன்களை தாண்டவில்லை. அருணாசல பிரதேச அணி 28.4 ஓவரில் 71 ரன்னுக்கு சுருண்டது. தமிழக அணி 435 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. 

தமிழகத்தின் சார்பில் சித்தார்த் 5, சிலம்பரசன் 2, முகமது 2 விக்கெட் வீழ்த்தினர். 

 

முதல் வீரர்

விஜய் ஹசாரே தொடரில் ரன் மழை பொழியும் தமிழக வீரர் ஜெகதீசன், கடந்த நான்கு  போட்டியில் 114, 107, 168, 128 ரன் எடுத்தார். நேற்று 277 ரன் விளாசிய இவர், ‘லிஸ்ட் ஏ’ அரங்கில் தொடர்ந்து ஐந்து சதம் அடித்த முதல் வீரர் ஆனார். 

* இதற்கு முன் இலங்கையின் சங்ககரா, தென் ஆப்ரிக்காவின் ஆல்விரோ பீட்டர்சன், இந்தியாவின் தேவ்தத் படிக்கல் 4 சதம் அடித்து இருந்தனர். 

* தவிர விஜய் ஹசாரே தொடரில் நான்கு சதம் விளாசிய கோஹ்லி, படிக்கல், பிரித்வி ஷா, ருதுராஜ் சாதனையை தகர்த்தார் ஜெகதீசன்.

* இத்தொடரில் ஒரு போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர் ஆனார் ஜெகதீசன் (277). 2021ல் புதுச்சேரிக்கு எதிராக பிரித்வி ஷா 227 ரன் எடுத்திருந்தார்.

 

277

விஜய் ஹசாரே தொடரில் 141 பந்தில் 277 ரன் குவித்த ஜெகதீசன், ‘லிஸ்ட் ஏ’ (ஒருநாள்) அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் குவித்த வீரர் என உலக சாதனை படைத்தார். 20 ஆண்டுக்கு முன் பிரவுன் 268 ரன் எடுத்ததே அதிகமாக இருந்தது.

இவ்வரிசையில் ‘டாப்–3’ வீரர்கள்:

வீரர்                             அணி/நாடு                   பந்து ரன்       எதிரணி/இடம்

ஜெகதீசன்            தமிழகம்/இந்தியா       141 277           அருணாசல பிரதேசம்/பெங்களூரு

பிரவுன்                  சர்ரே/இங்கிலாந்து       160 268           கிளாமர்கன்/ஓவல்

ரோகித்                  இந்தியா                             173 264           இலங்கை/கோல்கட்டா

* பெண்கள் கிரிக்கெட்டில் 2007ல் கண்யன் (இலங்கை) அணியின் ஸ்ரீபாலி வீரக்கொடி, 271 ரன் (எதிரணி–புஷ்பந்தனா) எடுத்தது அதிகமாக உள்ளது. 

 

416

‘லிஸ்ட் ஏ’ போட்டிகளில் ஜெகதீசன்–சாய் சுதர்சன் இணைந்து எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன் சேர்த்த ஜோடி வரிசையில் முதலிடம் பெற்று உலக சாதனை படைத்தனர். இவர்கள் நேற்று, முதல் விக்கெட்டுக்கு 231 பந்தில் 416 ரன் குவித்தனர். இதற்கு முன் 2வது விக்கெட்டுக்கு வெஸ்ட் இண்டீசின் கெய்ல்–சாமுவேல்ஸ் ஜோடி 372 ரன் (2015 உலக கோப்பை, ஜிம்பாப்வே) குவித்ததே அதிகம். 

* இந்திய ‘லிஸ்ட் ஏ’ அரங்கில் இதற்கு முன் சஞ்சு சாம்சன், சச்சின் பேபி (கேரளா) 2019ல் 338 ரன் எடுத்ததே அதிகமாக இருந்தது.

15

அருணாசல பிரதேசத்துக்கு எதிராக 15 சிக்சர் அடித்த ஜெகதீசன், விஜய் ஹசாரே தொடரில் ஒரு போட்டியில் அதிக சிக்சர் அடித்த வீரர் என சாதித்தார். 2019/20ல் மும்பை வீரர் ஜெய்ஸ்வால் 12 சிக்சர் அடித்ததே அதிகமாக இருந்தது. 

 

114

நேற்று 114 பந்தில் 200 ரன் எட்டிய ஜெகதீசன், அதிவேகமாக இரட்டை சதம் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தை, தெற்கு ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டுடன் (2021, குயின்ஸ்லாந்து) பகிர்ந்து கொண்டார். 

 

196.45

‘லிஸ்ட் ஏ’ அரங்கில் இரட்டை சதம் அடித்த வீரர்களில் அதிக ‘ஸ்டிரைக் ரேட்’ கொண்ட வீரர் ஆனார் ஜெகதீசன் (196.45). அடுத்த இடத்தில் டிராவிஸ் ஹெட் (181.1 ரன், 127 பந்தில் 230 ரன், 2021) உள்ளார்.

 

799

விஜய் ஹசாரே தொடரில் ஜெகதீசன் இதுவரை 6 இன்னிங்சில் 799 ரன் (5 சதம்) குவித்து, அதிக ரன் எடுத்த வீரர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார். 2020/21ல் பிரித்வி ஷா 827 ரன் குவித்தது முதலிடத்தில் உள்ளது.

 

பயோடேட்டா 

பெயர்: ஜெகதீசன்

பிறப்பு: கோயம்புத்துார், தமிழகம்

வயது: 26

முதல் தர அறிமுகம்: அக். 27, 2016

‘லிஸ்ட் ஏ’ அறிமுகம்: பிப். 26, 2017

ஐ.பி.எல்.,: சென்னை (2018–2022)

 

ஏலத்தில்…

ஐ.பி.எல்., தொடரில் 2018 முதல் சென்னை அணிக்காக விளையாடினார் ஜெகதீசன். 2020ல் 5 போட்டி (33 ரன்), 2022ல் 2 போட்டி (40 ரன்) என 4 ஆண்டில் 7 போட்டியில் 73 ரன் மட்டும் எடுத்தார். சமீபத்தில் சென்னை அணி இவறை கழற்றி விட்டது. இவரை ஏலத்தில் மீண்டும் வாங்க கடும் போட்டி ஏற்படலாம்.

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *