அ.தி.மு.க ஆட்சியில் செல்வாக்குமிக்கவர்களாக வலம்வந்த வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர் போன்றோரெல்லாம் இருக்கிற இடம் தெரியாமல் இருக்க, தன் பேச்சின் மூலம் கவனம் ஈர்த்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். ஈரோடு மாவட்டம், அத்தாணியில் அண்மையில் நடைபெற்ற அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில், “சில வெட்டுக்கிளிகளும், வேடந்தாங்கல் பறவைகளும், சில பட்டுப்பூச்சிகளும், பருவகாலச் சிட்டுகளும் அ.தி.மு.க-வைவிட்டுப் பிரிந்து சென்றதால் இந்த இயக்கத்தை அழித்துவிடலாம் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

காற்றைச் சுவர் எழுப்பி தடுத்துவிட முடியாது. கடலை அணை போட்டுத் தடுத்து விட முடியாது. தேரை ஏறி இமயம் தேயப்போவதில்லை. அதுபோல அண்ணா தி.மு.க-வை எவராலும் வீழ்த்திவிட முடியாது” எனக் கவிதை நடையில் பேசி கைதட்டலை அள்ளியிருக்கிறார் அவர். “ஒற்றைத் தலைமை விவகாரத்தைப் பயன்படுத்தி யார் யாரெல்லாமோ கட்சியில் முக்கியப் பதவி வாங்கிவிட்டுப் போய்விட்டார்கள். நீங்க இப்படியே இருக்கப் போறீங்களாண்ணா?” என்று ஆதரவாளர்கள் கொம்புசீவி விட்டதாலேயே எடப்பாடிக்கு ஆதரவாக தீவிரமாகக் களமாட ஆரம்பித்திருக்கிறாராம் செங்கோட்டையன். இனி அடிக்கடி அவர் மீடியாவில் முகம் காட்டுவார் என்றும் சொல்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள்.

அரசு தேயிலைத் தோட்டத்தை வனத்துறை வசம் ஒப்படைக்கும் தமிழக அரசின் முடிவைக் கண்டித்து நீலகிரி மாவட்டம், கூடலூரில் அண்மையில் பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார் அண்ணாமலை. ‘பாரத் ஜோடோ யாத்ரா’வின்போது கூடலூரில் முக்கியச் சாலையில் போக்குவரத்தை நிறுத்தி சாலையின் குறுக்கே மேடை அமைத்திருந்தார்கள். அதைவிட பிரமாண்டம் காட்ட வேண்டும் என்று நினைத்த அண்ணாமலை தரப்பு, “ராகுல் காந்திக்கு மேடை போட்ட அதே இடத்தில்தான் நாங்களும் மேடை போடுவோம்” என்று காவல்துறை முதல் வருவாய்த்துறை வரை முட்டி மோதியிருக்கிறது.

அண்ணாமலை

ஆனால், எந்தப் பயனும் இல்லையாம். வேறு வழியில்லாமல், காவல்துறை ஒதுக்கிய சாலையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், மிகக் குறைவாகவே தோட்டத் தொழிலாளர்கள் பங்கேற்றதும் அண்ணாமலையை அப்செட் ஆக்கியிருக்கிறது. தி.மு.க உயர் மட்டப்புள்ளி ஒருவர், “ராகுலும் அண்ணாமலையும் ஒண்ணா… அவருக்கு அனுமதி கொடுக்கவே கூடாது” என ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டதே, போலீஸார் ‘நோ’ சொல்லக் காரணம் என்கிறார்கள்.

தமிழ்நாட்டில் பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள், நெடுஞ்சாலைகள் அருகில் இருக்கும் மதுக்கடைகளை மூடக் கோரி, மக்கள் போராட்டமே நடத்தினாலும் மூடுவதற்கு முன்வராத டாஸ்மாக் நிர்வாகம், மயிலாடுதுறை நகரிலுள்ள ஐந்து கடைகளில் இரண்டு கடைகளை அதிரடியாக மூடியிருக்கிறது. இதில் ஒரு கடை பேருந்து நிலையம் அருகிலும், மற்றொரு கடை மூவலூர் காவிரிக் கரையிலும் இயங்கிவந்தவை. அந்தக் கடைகளில் அனுமதியின்றி பார் நடத்தியதாலேயே சீல் வைத்ததாகச் சொல்கிறார்கள் அதிகாரிகள்.

டாஸ்மாக்

“சட்டவிரோதமாக இயங்கிய பாரை மூடினால் நியாயம் இருக்கிறது. ஏன் காரணமே இல்லாமல் டாஸ்மாக் கடைகளை மூடினார்கள்?” என்று விசாரித்தால், வேறு காரணம் சொல்கிறார்கள். “கரூர் கம்பெனிக்கு மாதம்தோறும் கட்டவேண்டிய கப்பத்தை பார் உரிமையாளர்கள் கட்டவில்லை. எக்கச்சக்க பாக்கி வேறு. கூட்டத்தைத் தாங்கள் நினைக்கிற கடைக்கும், பாருக்கும் வர வைக்க வேண்டும் என்பதாலேயே, சட்டவிரோத பார்களோடு சேர்த்து இரு கடைகளையும் மூடிவிட்டார்கள்” என்கிறார்கள்.

தஞ்சாவூர் மாநகராட்சி உயரதிகாரிமீது உள்ளூர் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ஒருவர் தொடர் புகார்களை வாசித்துவருகிறார். உச்சகட்டமாக, மாநகராட்சி டெண்டர் பணிகளை அந்த அதிகாரி தனக்கு வேண்டிய நிறுவனங்களுக்குக் கொடுத்து முறைகேடு செய்திருப்பதாக முதல்வர் வரைக்கும் புகாரைத் தட்டிவிட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். ‘மாநகராட்சிமீது எம்.எல்.ஏ-வுக்கு இவ்வளவு அக்கறையா?’ என்று கேட்டால் கெக்கேபிக்கேவெனெச் சிரிக்கிறார்கள் அதிகாரிகள். “மாநகராட்சி விவகாரங்களில் தன்னைக் கேட்காமல் அந்த அதிகாரி தன்னிச்சையாக முடிவெடுக்கிறார்… டெண்டர் விவகாரங்களை, தான் கைகாட்டும் ஆட்களுக்குத் தருவதில்லை… நிதி தொடர்பாக என்ன விவகாரத்தை எடுத்துச் சென்றாலும் கேள்வி கேட்கிறார்” என்ற கடுப்பில்தான் இந்தப் புகாரைத் தட்டிவிட்டிருக்கிறார் எம்.எல்.ஏ என்கிறார்கள் அதிகாரிகள் மட்டத்தில்.

அல்வா மாவட்டத்தில், பெண் இன்ஸ்பெக்டர் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய காவல்துறை அதிகாரி ஒருவர், ஆவடி மாநகரக் காவல் கட்டுப்பாட்டிலிருக்கும் ஒரு காவல் மாவட்டத்துக்கு அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டார். வந்த இடத்தில், தன் கட்டுப்பாட்டிலிருக்கும் காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டருடன் அதீத நெருக்கம் காட்டுகிறாராம் அவர். “காதலைக்கூட தனிப்பட்ட விவகாரம் என்று விட்டுவிடலாம்.

ஆனால், அந்தப் பெண் சப்-இன்ஸ்பெக்டர்மீது வரும் குற்றச்சாட்டுகளையும் அதிகாரி கண்டுகொள்வதே இல்லையாம். அதனால் அந்தம்மாவின் ஆட்டம் அதிகமாகிவிட்டது” என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். “ஏற்கெனவே பெண் விவகாரத்தால்தான் இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனாலும் `லீலை’களைத் தொடர்கிறார் அந்த அதிகாரி” என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்.

நெல்லை மாவட்டம், சீவலப்பேரி கிராமத்தில், இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாகக் கோயில் பூசாரி சிதம்பரம், அவரின் உறவினர் மாயாண்டி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். அதனால் ஏற்பட்ட சலசலப்பு ஓய்வதற்குள் நெல்லை அருகே நடுக்கல்லூர் கிராமத்தில் அதே இரு சமூகத்துக்கிடையேயான பிரச்னையில் நம்பிராஜன் என்ற 27 வயது இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்.

ஒரு பக்கம் சாதிக்கலவர அபாயத்தால் போலீஸாரும், இன்னொரு பக்கம் உயிர் பயத்தில் பாதிக்கப்பட்ட மக்களும் இருக்கிறார்கள். “கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, சமுதாய வாக்குகளை தி.மு.க-வுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காக ‘ராஜ’ அமைச்சர் எங்கள் கிராமத்துக்கு வந்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது நம் சமூகப் பாதுகாவலனாக இருப்பேன் என்றார். ஆனால், நாங்கள் உயிர்ப் பிரச்னையில் அல்லாடிக்கொண்டிருக்கும் நிலையில், குறைந்தபட்சம் ஆறுதல் சொல்லக்கூட அவர் வரவில்லை” என்று சமுதாய மக்கள் வெளிப்படையாகப் பேசத் தொடங்கியிருப்பதால் இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவிக்கிறாராம் அமைச்சர். நேரில் சென்றால் இன்னொரு சமுதாயம் கோபித்துக்கொள்ளும் என்பதால், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தன்னுடைய சார்பில் நிவாரணத் தொகையை மட்டும் கொடுத்தனுப்பினாராம் அமைச்சர்!

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล