இதுகுறித்துப் பேசிய வரலாற்று ஆர்வலர்கள்,
“இந்த லிங்கம் சூத்திரக் குறியீட்டுடன் காவிரி ஆற்றைப் பார்த்தவாறு கிழக்கு நோக்கி இருக்கிறது. லிங்கத்தின் மேல் பகுதி தட்டையாக உள்ளது. ஒரு காலத்தில் இவ்விடத்தில் மிகப்பெரிய சிவாலயம் இருந்திருக்க வேண்டும். லிங்கத்தின் அமைப்பு மற்றும் பிற சூத்திர குறியீட்டை வைத்து பார்க்கும்போது, ஏறக்குறைய 6 – ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட சிவலிங்கமாக இருக்கக்கூடும். ஆந்திர மாநிலத்தில் உள்ள குடிமல்லம் சிவலிங்கம்தான் பழைமையானது என்று கருதி வந்த நிலையில், தமிழகத்தில் உள்ள இந்த சிவலிங்கம் உயரமான மற்றும் பழைமையான சிவலிங்கமாக இருக்கலாம் எனத் தெரிகிறது. இதன்மூலம், தமிழர்களின் பழைமையான நாகரிகம் விளங்குகிறது. இப்படித் தொடர்ச்சியாகக் கரூர் அமராவதி ஆற்றங்கரையிலும், நாமக்கல் காவிரி ஆற்றங்கரையிலும் தொடர்ச்சியாகப் பழைமையான சிவலிங்கங்கள் கிடைத்து வருவது சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது” என்றனர்

இதுகுறித்து, அந்த நிலத்தின் உரிமையாளர் நடராஜ்,
“கடந்த 72 ஆண்டுகளுக்கு முன் தரிசாக இந்த நிலம் இருந்தது. 1950-ம் ஆண்டு எனது தந்தை விவசாயம் செய்ய நிலத்தை சீரமைத்தார். கடந்த 22 வருடமாக நான் விவசாயம் செய்து வருகிறேன். அப்போது, இது சிவலிங்கம் என்று எனக்குத் தெரியாது. ‘பாண்டியன் நட்ட கல்’ என்று கூறியிருந்தனர். எட்டு வருடத்திற்கு முன் சிவனடியார் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த பகுதிக்கு வந்து, ‘இது சிவலிங்கம்’ என கூறினார். இதையடுத்து, அவ்வப்போது சிலர் வந்து லிங்கத்தை வழிபாடு செய்து சென்றனர். பின்னர், ஆய்வு செய்த சிலர் இது பழைமையான சிவலிங்கம் என்று உறுதிப்படுத்தினர்” என்றார்.
இந்தப் பழைமையான சிவலிங்கத்திற்கு நாமக்கல், கரூர் மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த சிவனடியார்கள் வந்திருந்து, பாலாபிஷேகம் செய்து, சிவ வழிபாடு நடத்தி வருகின்றனர். ஏராளமான பக்தர்களும் அங்கு வந்து, இந்த அற்புத சிவலிங்கத்தை வழி்பட்டுச் செல்கின்றனர்.