புதுச்சேரி-சமூக வலைத்தளங்களில் குழந்தைகள் தொடர்பான அந்தரங்க போட்டோ மற்றும் வீடியோக்கள் பதிவிறக்கம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
சமூக வலைதளங்களில் குழந்தைகளின் அந்தரங்க போட்டோ மற்றும் வீடியோக்கள் அதிகம் பகிரப்படுகிறது. இதனால், குழந்தைகள் மீதான வன்ம தாக்குதல்கள் மற்றும் போக்சோ வழக்குகள் அதிகரித்தது வருகிறது.
அதனை கட்டுப்படுத்திட பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-ஆப், டெலிகரம் போன்ற சமூக வலைதளங்களில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி குழந்தைகள் சம்பந்தமான ஆபாச போட்டோ, வீடியோ பதிவிட்டால் என்.ஜி.ஓ., உதவியுடன் தானியங்கி மென்பொருள் மூலமாக தணிக்கை செய்து கண்டுபிடிக்கப்படுகிறது.
இதனை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய என்.சி.ஆர்.பி. என்ற தளத்திற்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது.
அதன் அடிப்படையில், நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் சம்பந்தப்பட்ட மாநில சைபர் கிரைம் தலைமை அலுவலகத்திற்கு அனுப்புகின்றது.
இது தொடர்பாக, பல்வேறு மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதேபோல், புதுச்சேரியில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனிலும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் வழக்குகள் பதியப்பட்டு வருகிறது.
ஆகையால், பொது மக்கள், இளைஞர்கள் குழந்தைகள் சம்பந்தமான போட்டோ மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவது, பிறருக்கு பகிர்வது, இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்வது இந்திய தொழில் நுட்ப சட்டப்படி ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகும். ஆகவே, இதுபோன்ற நடவடிக்கைகளில் யாரும் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்