அடுத்தாண்டு இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பை நடைபெறவுள்ளநிலையில், இந்திய அணியில் தொடர்ந்து சொதப்பும் ரிஷப் பந்த் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும், இந்த இருவரைவிட நல்ல ஃபார்மில் இருக்கும் சஞ்சு சாம்சனுக்கு ஆடும் லெவனில் தேர்வு செய்யப்படாமல் அல்லது தேர்வுசெய்து பெஞ்சில் அமரவைப்பதாகவும் ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். ரசிகர்கள் முதல் முன்னாள் வீரர்கள் வரை இதுகுறித்து ஏன் முக்கியத்துவம் அளித்துப் பேசி வருகிறார்கள் என்று இங்குப் பார்க்கலாம்.

டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டநிலையில், அடுத்து நடந்த 2 டி20 போட்டிகளில் இந்திய அணி 1- 0 என்ற கணக்கில் வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து ஷிகார் தவான் தலைமையிலான 3 ஒருநாள் போட்டி நாளை முதல் துவங்க உள்ளது. இந்திய நேரப்படி நாளை காலை 7 மணிக்கு, முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.

வங்கதேச தொடரில் சஞ்சு சாம்சன், சூர்யகுமார் ஏன் இல்லை?

நியூசிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு அடுத்ததாக, வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கிறது. இதில் தற்போது ஒருநாள் தொடருக்காக தேர்வு செய்யப்பட்ட வீரர்கள், குறிப்பாக சஞ்சு சாம்சன், சூர்யகுமார் தேர்வு செய்யப்படாதது பற்றிய கேள்விகள் தான் அதிகரித்து காணப்படுகின்றன. ஏனெனில் அடுத்த ஆண்டு (2023), 50 ஓவர் உலகக் கோப்பை இந்தியாவிலும், அதற்கு அடுத்த ஆண்டு (2024), அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் டி20 உலகக் கோப்பையும் நடைபெற உள்ளது. தோனியின் கேப்டன்சிக்குப் பிறகு இந்திய அணி எந்தவித ஐசிசி கோப்பையையும் வெல்லாத நிலையில், இனி வரும் ஐசிசி போட்டிகளிலாவது கோப்பையை வெல்லும் முனைப்பில், தற்போதே இந்திய அணியை தயார்ப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது.

image

இதனால்தான் மூத்த வீரர்களான ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, முகமது ஷமி, தினேஷ் கார்த்திக், அஸ்வின் ஆகியோருக்கு நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டது. மேலும் காயம் காரணமாக பும்ரா, ஜடேஜா ஆகியோரும் பங்கேற்கவில்லை. இதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான டி20 இந்திய அணியில் இளம் வீரர்கள் பலரும் இடம்பிடித்தாலும், ஐபிஎல் போட்டிகளில் சாதித்து வரும் சஞ்சு சாம்சன் (28) ஆடும் லெவனில் இல்லாமல் பெஞ்சில் அமர வைக்கப்பட்டது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொதப்பியும் ரிஷல், ஸ்ரேயாஸ்-க்கு ஏன் வாய்ப்பு?

கே.எல். ராகுல், ரிஷப் பந்த் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தொடர்ந்து சொதப்பி வந்தாலும், அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுவதாக ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக ஷார்ட் பிட்ச் பௌன்சரில் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் அவுட்டாவதை வழக்கமாக வைத்துள்ள ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு, அதேநேரத்தில் ஷார்ட் பிட்ச்சுகளை சிக்ஸர்களாக பறக்கவிடும் சஞ்சு சாம்சனுக்கு இடம் அளிக்காமல் பிசிசிஐ பாரபட்சமாக நடந்துக்கொண்டுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

image

ஹர்திக் பாண்டியா சொல்வது என்ன?

டி20 தொடரை கைப்பற்றியப் பின்னர் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவிடம் இதுகுறித்து கேட்டபோது, “இந்தத் தொடர் 3 போட்டிகளாக நடைபெற்றிருந்தால் சஞ்சு சாம்சன், உம்ரான் மாலிக் போன்றவர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருப்போம். ஆனால் 2 போட்டிகள் மட்டுமே நடைபெற்றதால்தான் அவருக்கு துரதிருஷ்டவசமாக, சில காரணங்களால் அவருக்கு வாய்ப்பு கொடுக்க முடியவில்லை. மேலும் அவரது இடத்தில் நான் இருந்து தொடர்ச்சியாக பெஞ்சில் அமர்ந்தால் என்ன மனநிலையில் இருப்பேன் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். அது மிகவும் கடினமானது” என்று மழுப்பலாக பதில் தெரிவித்தார். இது சஞ்சு சாம்சனின் ரசிகர்களை மேலும் கோபப்படுத்தியது.

இதேபோன்றுதான் தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் கேப்டனான ஷிகார் தவானும் சஞ்சு சாம்சன் பற்றி கூறியுள்ளார். அதில் அவர், “பெரும்பாலும் ஒவ்வொரு வீரரும் கடந்தத் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டாலும், ஆடும் லெவனில் இல்லாத இந்தக் கட்டத்தைக் கடந்துதான் செல்கிறார்கள். தொடர்ந்து பயிற்சியாளர்களும் கேப்டன்களும் வீரர்களுடன் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். சாம்சன் போன்ற வீரர்களுக்கு அவர்கள் ஏன் அணியில் தேர்வுசெய்யப்படவில்லை என்பதில் தெளிவு உள்ளது. அடிப்படையில், இது அணியின் நன்மைக்காகவும், வீரர்கள் ஒரு குழுவாக செயல்படுவதற்காகவும் இவ்வாறு செய்யப்படுகிறது” என்று தெரிவித்தார்.

image

ஏற்கனவே வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சூர்யகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் தேர்வுசெய்யப்படாமல், ரிஷப் பந்த் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்தநிலையில், ஷிகார் தவானின் இந்தப் பேச்சு மேலும் அவர்களை உசுப்பேற்றியுள்ளது. இதனால், இந்திய அணியில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டு வருவதாக ரசிகர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். நடராஜன், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்காதது ஏன் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எனினும், சஞ்சு சாம்சன் பவுன்சர்களை சிறப்பாக எதிர்கொண்டாலும் ஸ்பின்னர்களுக்கு எதிராக படுமோசமாக திணறி வருகிறார். அதேநேரத்தில், பவுன்சருக்கு எதிராக திணறினாலும், ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக செயல்படுவதாகவே கருதப்படுகிறது. மேலும் மிடில் ஆர்டரில் இறங்கி எப்பேர்ப்பட்ட ஸ்பின்னர்களையும் அசால்ட்டாக எதிர்கொள்ள கூடியவர் என்று கூறப்படுவதால் தான் ஸ்ரேயாஸ் ஐயருக்கு மூன்று வடிவப் போட்டிகளிலும் தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *