புதுடெல்லி: வரலாற்று ஆய்வாளர்கள் இந்திய வரலாற்றை திருப்பி எழுத வேண்டும். இந்திய பின்புலத்தில் எழுதப்படும் வரலாற்றுக்கு மத்திய அரசு உதவி செய்யும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

டெல்லியில் நேற்று அசாம் மாநில அரசின் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, “வரலாறு படித்த மாணவன் நான். நம் நாட்டின் வரலாறு சரியாக சொல்லப்படவில்லை. அது சிதைக்கப்பட்டுள்ளது என்று எனக்குத் தோன்றுகிறது. நாம் அந்தத் தவற்றை இப்போது சரி செய்ய வேண்டும்.

வரலாற்றை சரியானதாக கொடுக்க யார் நமக்குத் தடை போடுகிறார்கள் என்று தெரியவில்லை. நம் நாட்டின் வரலாற்றை சரியானதாக, அதன் பெருமை சிதைக்கப்படாமல் கொடுக்க வேண்டும்.

இங்கே அமர்ந்துள்ள அனைத்து மாணவர்களும், பல்கலைக்கழக பேராசிரியர்களும் தவறான வரலாற்றை விட்டொழித்து 150 ஆண்டுகளாக ஆட்சி செய்த 30 வம்சங்களைப் பற்றி மறு ஆய்வு செய்ய வேண்டும். சுதந்திரத்திற்காகப் போராடிய 300 முக்கிய தலைவர்கள் பற்றி எழுத வேண்டும். அதை வரலாற்று ஆய்வாளர்கள் எழுதிவிட்டால் இப்போது இருக்கும் போலி கற்பிதங்கள் அதுவாகவே வழக்கொழிந்துவிடும். வரலாற்று ஆராய்ச்சியில் மாணவர்களுக்கும், வரலாற்று ஆய்வாளர்களுக்கும் மத்திய அரசு எல்லா உதவிகளையும் செய்யும். வாருங்கள், ஆய்வு செய்யுங்கள், வரலாற்றை திருத்தி எழுதுங்கள். அதுதான் எதிர்கால சந்ததியையும் ஊக்குவிக்கும்.

17வது நூற்றாண்டைச் சேர்ந்த லச்சித் பார்புகான் முகாலய மன்னர்கள் இந்தியாவில் தங்கள் ஆதிக்கத்தை விஸ்தரிப்பதை கட்டுப்படுத்தினார். ஷாரியாகட் போரில் தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாது போரிட்டு முகலாயர்களை அவர் வென்றார். அவரைப் போன்றோரை நினைவுகூரும் வகையில் வரலாறு இந்தியப் பார்வையில் திருப்பி எழுதப்பட வேண்டும்” என்றார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: