மலேசியாவின் 15-வது பொதுத் தேர்தல் கடந்த 19-ம் தேதி நடத்தப்பட்டது. இதில் 70 சதவிகித வாக்குகள் பதிவாகின. இருப்பினும் தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அன்வர் இப்ராஹிம் தலைமையிலான நம்பிக்கைக் கூட்டணி, முகைதீன் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி, இடைக்கால பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் சார்ந்திருக்கும் தேசிய முன்னணி, முன்னாள் பிரதமர் மகாதீர் தலைமையிலான ஜி.டி.ஏ ஆகிய கட்சிகள் தேர்தல் களம் கண்டன. தேர்தல் முடிவுகளில் தேசிய முன்னணி கட்சிக்கும், மகாவீர் ஜி.டி.ஏ கட்சிக்கும் பின்னடைவு ஏற்படவே… பிரதமர் பதவிக்கான போட்டியில் அன்வர் இப்ராஹிமும், முகைதீன் யாசினும் மட்டுமே இருந்தனர். இதில் அன்வர் கட்சிக்கு 82 இடங்களும், முகைதீன் கூட்டணி 73 இடங்களும் வெற்றிப் பெற்றிருந்தன.

இரு தலைவர்களும் அனைத்துக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, ரகசிய கூட்டங்கள் என பல விதமான முயற்சிகளை மேற்கொண்டனர். இருப்பினும், மலேசிய மாமன்னர் விதித்திருந்த காலக்கெடுவிற்குள் சரியான முடிவை எட்ட முடியவில்லை. எனவே, நாட்டின் நலன் கருதி அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய “ஒற்றுமை அரசாங்கம்” அமைக்கலாம் என்கின்ற ஒரு அறிவுரையை மாமன்னர் வழங்கினார். இது தொடர்பாக அன்வர் முகைதீன் அங்கு இருவரையும் அரண்மனைக்கு அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அன்வர் தரப்புடன் இணைந்து பணியாற்ற தனக்கு விருப்பமில்லை என்பதை உறுதிப்படத் தெரிவித்தார் முகைதீன் யாசின்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக தேசிய முன்னணி கட்சி தலைவர்கள் மாமன்னரைச் சந்தித்தனர். அதன் பிறகு ஐக்கிய அரசாங்கத்தை நாங்கள் ஆதரிக்க தாயார். ஆனால் முகைதீன் யாசின் தலைமையில் இந்தக் கூட்டணி அமையாது என்பதைத் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால் மறைமுகமாக அன்வர் இப்ராஹிம் தலைமையை ஆதரிப்பதாக தகவல் வெளியாகின.
அதை உறுதிப்படுத்தும் விதமாக அன்வர் ஆதரவாளர்கள் சிலர் சமூக வலைதளங்களில் அடுத்த பிரதமர் அன்வர் இப்ராஹிம் எனப் பதிவிட்டு வந்தனர். இதை மன்னர் மாளிகை அறிவிப்பும் உறுதி செய்தது. மலேசிய மாமன்னர் முன்பு அன்வர் பிரதமராகப் பதவியேற்று இருக்கிறார்.

25 ஆண்டுகளுக்கு முன்பு மகாதீர் ஆட்சியின் கீழ் துணை பிரதமராக இருந்தவர் அன்வர். தன்பாலின ஈர்ப்பு சர்ச்சையில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின் அன்வரின் அரசியல் முடிந்ததாகவே அனைவரும் கருதினர். ஆனால் சிறையில் இருந்தபடியே மறுமலர்ச்சி என்னும் முழக்கத்தையும் தொடங்கி, தன் மனைவி வான் அசிலா நேரடியாக களமிறங்கி அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார். பிறகு தன் ஆதரவாளர்கள் துணையோடு புது கட்சியைத் தொடங்கி அரசுக்கு எதிராகப் பல போராட்டங்களை முன்னெடுத்து, தன் நீண்ட கால அரசியல் பயணத்தில் வெற்றி கண்டிருக்கிறார்.

அன்வர் இப்ராஹிம் “தன்னை ஒருமுறை வாக்களித்து ஆட்சியில் அமர வையுங்கள், நாட்டை நல்ல முறையில் வழிநடத்திச் செல்வேன்” என்றார். இவரின் 25 ஆண்டுகால முழக்கத்திற்கு மக்களின் பதில் இந்த வெற்றி என்று அவருடைய ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.