புதுடெல்லி: வரும் 2023-24ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் தயாரிப்பு பணிக்காக மாநில அமைச்சர்களுடன் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை நடத்தினார். இதனால் புதிய வரிகள் விதிப்பது, மாநிலங்களுக்கு வரிகளை கூடுதலாக வழங்குவது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 1, 5ம் தேதிகளில் நடைபெறும் நிலையில், டிச. 8ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இமாச்சல் தேர்தல் முடிவுற்ற நிலையில், அம்மாநில தேர்தல் முடிவுகள் டிச. 8ம் தேதி வெளியாகிறது. இதையொட்டியும், புதிய நாடாளுமன்ற கட்டிடப் பணிகள் குறித்த நேரத்தைக் காட்டிலும் நீண்டு செல்வதாலும் இந்த ஆண்டுக்கான குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 7ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை 23 நாட்களில் 17 அமர்வுகளுடன் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத் தொடர் முடிவுற்றவுடன் 2023-24ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது.

கொரோனா பாதிப்பிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், ரஷ்யா- உக்ரைன் போரால் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எகிறும் பண வீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி பலமுறை தொடர்ச்சியாக வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளது. இத்தகைய சூழலில், பொருளாதாரம் வளர்ச்சியை அதிகரிக்கவும், அத்துடன் விரைவாக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் ஒன்றிய பட்ஜெட் அறிவிப்புகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. மேலும் 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், இடைக்கால பட்ஜெட் மட்டுமே தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்படும். எனவே அடுத்தாண்டுக்கான நிதிநிலை அறிக்கை  மக்களவை தேர்தலுக்கு முந்தைய இறுதி பட்ஜெட் ஆக இருக்கும்.

அதனால் ஆளும் பாஜக அரசு பட்ஜெட்டில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. அந்த பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் ஒன்றிய பட்ெஜட் தயாரிப்பு பணிகளை தொடங்கிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய தொழில் கூட்டமைப்பினருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது உள்கட்டமைப்பு மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு  அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். நேற்று முன்தினம் வேளாண்துறை மற்றும்  நிதித்துறை பிரதிநிதிகளை சந்தித்த நிர்மலா சீதாராமன், அவர்களுடன் ஆலோசனைகளை நடத்தினார். தொடர்ந்து மாநில நிதி அமைச்சர்களுடன் இன்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். தமிழக அரசின் சார்பாக மாநில நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நிதி அமைச்சர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். சில மாநிலங்களில் முதல் அமைச்சர்களே நிதி துறையை தங்கள் பொறுப்பில் வைத்திருப்பதால், அந்த மாநிலங்களுக்கு பிரதிநிதிகளாக முதல்வர்களே கலந்து கொண்டனர். ஒன்றிய நிதி அமைச்சக அதிகாரிகள் பட்ஜெட் பணிகள் தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் தகவல்களை திரட்டி, மாநில அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினர். மேலும் தற்போதைய பொருளாதார நிலவரம் மற்றும் மாநிலங்களின் நிதி நிலை குறித்து நிர்மலா சீதாராமன் கேட்டறிந்தார்.

மேலும், நிலுவையில் உள்ள நிதித்தொகைகளை விடுவிப்பது, வரி சீர்திருத்தம் மற்றும் ஜிஎஸ்டி வரி தொடர்பான விவகாரங்கள் குறித்து மாநில நிதி அமைச்சர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாநில அரசுகள் தங்களுக்கு தேவையான திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகளை 2023-24ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தின. இக்கூட்டத்தில் நிதி அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். புதிய வரிகள் விதிப்பு குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *