Loading

108 வைணவ திவ்ய தேசங்களில், உத்தராகண்ட் மாநிலத்தில் தெக்ரி கார்வால் மாவட்டத்தில் உள்ள தேவப்பிரயாகை நீலமேகர் கோயில் (திருக்கண்டம் என்னும் கடிநகர்) 68-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. ரிஷிகேஷில் இருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் 45 மைல் தொலைவில் 1,700 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இத்தலத்தின் சிறப்புகள் பற்றி பத்ம புராணம், மத்ஸ்ய புராணம், கூர்ம புராணம் மற்றும் அக்னி புராணங்களில் கூறப்பட்டுள்ளன. மிகச் சிறந்த யாகத்தை பிரம்மதேவர் இங்கு தொடங்கியதால், இவ்விடம் பிரயாகை என்றும், திருமாலை தேவனாகக் கருதி இவ்விடத்தில் யாகம் செய்யப்பட்டதால், தேவப்பிரயாகை என்றும் அழைக்கப்படுகிறது. தேவர்கள் அனைவரும் பிரம்ம முகூர்த்த வேளையில் திருமாலை வணங்குவதால் தேவப்பிரயாகை என்று இத்தலம் பெயர் பெற்றது.

இத்தலத்தை பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

சலம் பொதி உடம்பின் தழல் உமிழ் பேழ் வாய்ச்சந்திரன் வெங்கதிர் அஞ்ச

மலர்ந்தெழுந்து அணவி மணிவண்ண உருவின்

மால் புருடோத்தமன் வாழ்வு

நலம் திகழ் சடையான் முடிகொன்றை மலரும்

நாரணன் பாதத் துழாயும்

கலந்து இழிபுனலால் புகர்படு கங்கைக்

கண்டமென்னும் கடி நகரே!

மூலவர் : நீலமேகப் பெருமாள், புருஷோத்தமன், வேணி மாதவன் | தாயார் : புண்டரீகவல்லி, விமலா | தீர்த்தம்: மங்கள தீர்த்தம், கங்கை நதி, பிரயாகை | விமானம் : மங்கள விமானம்

தேவேந்திரன் தேவப்பிரயாகையைப் பாதுகாக்கிறார். இத்தலத்தில் உள்ள ஆலமரம், ஊழிக் காலத்தில் அழியாமல் இருக்கும் என்றும், அதன் இலையில்தான் திருமால் குழந்தையாகப் பள்ளி கொள்வார் என்றும் மத்ஸ்ய புராணம் கூறுகிறது.

கோயில் சிறப்பு: தேவப்பிரயாகையில் கங்கை, யமுனை, அலக்நந்தா, பாகீரதி, சரஸ்வதி ஆறுகள் சங்கமிப்பதால், இத்தலம் பஞ்சப் பிரயாகையுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் கூடும் இடம் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது. மங்கள விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் நீலமேகப் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். ரகுநாத்ஜி என்றும் பெருமாள் அழைக்கப்படுகிறார். இத்தல மூலவரை ஆதிசங்கரர் ஸ்தாபித்தார்.

இத்தலத்தில் ஆஞ்சநேயர், கால பைரவர், மகாதேவர், பத்ரிநாதர் சந்நிதிகள் உண்டு. பிரம்மதேவர், பரத்வாஜ முனிவர், தசரத மன்னன், ராமபிரான் ஆகியோர் இத்தலத்தில் தவம் செய்துள்ளனர். கோயிலுக்குள் நான்கு தூண்களைச் சுற்றியுள்ள பலகைகளில் பெரியாழ்வாரின் பாசுரங்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன

படைப்புத் தொழிலில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக மிகவும் சோர்வுடன் இருந்தார் பிரம்மதேவர், இத்தலத்துக்கு வந்து நீராடி, பெரிய யாகம் ஒன்றை நடத்தினார், அதனால் மன உளைச்சல் அடியோடு விலகி, புதிய உற்சாகத்துடன் படைப்புக்கான ஆற்றலைப் பெற்றார். இத்தலத்தில் பரத்வாஜ முனிவர் தவம் இயற்றி, யாகம் செய்துள்ளார். அதன்பலனாக பின்னாளில் ராமபிரான் அவரது ஆசிரமத்துக்கு விருந்தினராக வரும் பேறு பெற்றார். மேலும் சப்த ரிஷிகளில் ஒருவராக ஆகும் தகுதியைப் பெற்றார்.

மகாபாரதப் போரில் பாண்டவர்கள் வென்றாலும், தன் உடன் பிறந்தோரைக் கொல்ல வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. இதனால் வேதனை அடைந்து, மனவலியால் உழன்று கொண்டிருந்தவர்கள் பின்னர் இத்தலத்துக்கு வந்து கங்கையும் யமுனையும் சங்கமமாகும் இடத்தில் நீராடி அதைப் போக்கிக் கொண்டனர். உடல் அழுக்கு மட்டுமின்றி, மன அழுக்கையும் போக்க வல்லவளாக கங்கை உள்ளாள்.

தேவப் பிரயாகையில் அன்னதானம்: தேவப்பிரயாகையில் அன்னதானம் செய்வது நற்பலன்களைத் தரும் என்று கூறப்படுகிறது. ஸ்வேதகேது என்ற மன்னர் அன்னதானத்தைத் தவிர அனைத்து தானங்களையும் செய்துள்ளார். அன்னதான மகிமையைப் பற்றி முனிவர்கள் பலர் கூறினாலும் எதையும் அவர் கேட்கவில்லை. இறுதிக் காலத்துக்குப் பிறகு மேலுலகம் சென்ற பின் அங்கு அவருக்கு எப்போதும் பசித்தது. தண்ணீருக்கும், உணவுக்கு அலைந்தார். பூலோகம் சென்று உணவைத் தேடு என்று அங்குள்ளவர்கள் அவரை கீழே தள்ளினர். ஸ்தூல உடலுடன் பூலோகத்தில் மிகவும் சிரமப்பட்டார். அவரைக் கண்ட அகத்திய முனிவர், அவரை பிரயாகை சென்று அன்னதானம் செய்யச் சொன்னார். அதன்படி அவன் செய்த புண்ணிய பலன்களையெல்லாம் ஒரு கணையாழியாக மாற்றி, அதை விற்று பொருள் வாங்கி அன்னதானம் செய்தான். அப்போதே அவன் பசி தீர்ந்தது.

பஞ்சப் பிரயாகை: ஹரித்வாரில் இருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் 5 புண்ணிய சங்கமங்கள் உள்ளன. அலக்நந்தா (பச்சை) நதியுடன் பாகீரதி (பழுப்பு) நதி சங்கமமாகும் தேவப்பிரயாகை, தேவப்பிரயாகையும் நந்தாகினியும் சங்கமிக்கும் ருத்ரப் பிரயாகை, அலக்நந்தாவுடன் பிண்டர் நதி சங்கமிக்கும் கர்ணப்பிரயாகை, கருடகங்கா என்ற தௌலி நதி சேரும் விஷ்ணுப் பிரயாகை, இவற்றுடன் நந்தாகினி நதி சேரும் நந்தப் பிரயாகை என்று பஞ்ச பிரயாகைகள் உள்ளன. சார்தாம் யாத்திரை மேற்கொள்பவர்கள் இங்கு நீராடிச் செல்வது வழக்கம். கர்ணன் தவம் செய்து, தனது புண்ணியத்தை கண்ணனுக்கு அளித்த தலம் இதுவாகும். கர்ணப் பிரயாகையில் கர்ணனுக்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

கங்கையின் சிறப்பு: பெரியாழ்வார் தன் பாசுரங்களில் கங்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடியுள்ளார், சிவபெருமான் தலையில் அவர் அணிந்துள்ள கொன்றை மலரைத் தழுவியபடி இறங்கும் கங்கை, திருமாலின் பாதத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் துளசியையும் தழுவுவதால், இரண்டின் சாரத்தால் ஒளிபெற்று, அடியவர்களின் அனைத்து துயரங்களையும் பாபங்களையும் கரைத்து அவர்களை கரையேற்றுகிறாள் என்று பாடுகிறார். இப்படிப்பட்ட கங்கை நதியே எல்லா பாவங்களையும் தீர்க்க வல்லது என்றால், அதன் கரையில் அர்ச்சாவதாரமாக வீற்றிருக்கும் புருஷோத்தமன் எல்லாவித பாக்கியங்களையும் அளிக்க வல்லவர் என்ற பொருளில் பாடியுள்ளார் பெரியாழ்வார்.

திருவிழாக்கள்: மகர சங்கராந்தி, வசந்த பஞ்சமி சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *