Loading

தோஹா: உலக கோப்பை கால்பந்து டி பிரிவில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. கத்தார் தலைநகர் தோஹாவில்  உள்ள அல் ஜனாப் அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில், 9வது நிமிடத்தில் ஆஸி. வீரர் கிரெய்க் குட்வின் அபாரமாக கோல் அடித்து பிரான்ஸ் அணிக்கு அதிர்ச்சியளித்தார். ஏற்கனவே பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணி சவுதி அரேபியாவிடம் மண்ணைக் கவ்வி இருந்ததால், பிரான்ஸ் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர். ஆனால், இந்த ஆரம்ப அதிர்ச்சியில் இருந்து உடனடியாக சுதாரித்து மீண்ட சாம்பியன்கள் ஒருங்கிணைந்து விளையாடி ஆஸி. தரப்புக்கு தண்ணி காட்டினர்.

இதன் பலனாக 26வது நிமிடத்தில் கிடைத்த கார்னர் வாய்ப்பை பயன்படுத்திய பிரான்ஸ் அணியின் அட்ரியன் ராபியாட் கோல் அடித்து 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தார். அதே உற்சாகத்துடன் தாக்குதலை தொடர்ந்த பிரான்ஸ் அணிக்கு 32வது நிமிடத்தில் ஒலிவியர் கிரவுட் அபாரமாக  கோல் அடிக்க 2-1 என முன்னிலை பெற்றது. இடைவேளை வரை இதே நிலை நீடித்தது. இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் அணி, 68வது நிமிடத்தில்  நட்சரத்திர வீரர் கிளியன் எம்பாப்பே, 71வது நிமிடத்தில் ஒலிவியர் கிரவுட் மீண்டும் ஒரு கோல் அடிக்க பிரான்ஸ் 4-1 என்ற கணக்கில் வலுவான நிலையை எட்டியது. அதன்பிறகு இரு அணிகளும் கோலடிக்க மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் பிரான்ஸ் 4-1 என்ற கோல் கணக்கில் ஆஸி.யை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

* ‘ஒன் லவ்’ பட்டைக்கு ஃபிபா தடை விதித்த நிலையில், ஜப்பான் அணியுடன் நேற்று மோதிய ஜெர்மனி வீரர்கள் போட்டி தொடங்குவதற்கு முன்பாக தங்கள் வாய்களை பொத்தியபடி அணிவகுத்து நின்று தங்கள் எதிர்ப்பை வித்தியாசமான முறையில் பதிவு செய்தனர். ஃபிபா தடை விதித்தது துரதிர்ஷ்டவசமானது என்று ஜெர்மனி அரசு தரப்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அர்ஜென்டினா அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தின்போது கோல் கீப்பர் முகமது அல் ஓவைசுடன் பலமாக மோதிக்கொண்டு முகத்தில் படுகாயம் அடைந்த சவுதி வீரர் யாசர் அல் ஷாரானிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நடப்பு உலக கோப்பை தொடரில் அவர் மேற்கொண்டு விளையாட மாட்டார் என சவுதி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *