International
oi-Vigneshkumar
கத்தார்: கத்தார் உலகக் கோப்பையில் போட்டிகள் பரபரப்பாக ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில், மறுபுறம் அதற்கு இணையாகச் சர்ச்சைகளும் தொடர்ந்தே வருகிறது.
உலக கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தாரில் தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய இந்தத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த உலகக் கோப்பையில் தொடக்கம் முதலே டாப் அணிகளுக்குப் பல அதிர்ச்சி முடிவுகள் கிடைத்து வருகிறது. அர்ஜெண்டினா, ஜெர்மனி போன்ற பலம்வாய்ந்த அணிகளைக் குட்டி அணிகள் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தன.
3000 வருட தவறு.. கத்தார் ஏன் மன்னிப்பு கேட்கணும்? உலகை உலுக்கிய FIFA தலைவர் பேச்சு.. ஏன் முக்கியம்?

தன்பால் ஈர்ப்புக்குத் தடை
இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு சர்ச்சையும் அங்குத் தொடர்ந்து வருகிறது. தீவிர இஸ்லாமிய நாடான கத்தாரில் தன்பால் ஈர்ப்புக்கு அனுமதி இல்லை. போட்டி தொடங்கும் முன்னரே தன்பல் ஈர்ப்பு தடை தொடர்பாக எதையும் பேசக் கூடாது என்று பிபா கேட்டுக் கொண்டு இருந்தது. இருப்பினும், வீரர்கள் யாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை. பல்வேறு வீரர்களும் தன்பல் ஈர்ப்புக்கு ஆதரவாக இருப்பதாக வெளிப்படையாகவே தெரிவித்தனர். இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு, தன்பல் ஈர்ப்புக்கு ஆதரவாக வானவில் ஆடை அணிந்த அமெரிக்க செய்தியாளர் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அமெரிக்கச் செய்தியாளர்
கிராண்ட் வால் என்ற அந்த செய்தியாளர் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாகத் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், அதன் பின்னரே அவரை கத்தார் போலீசார் விடுவித்தனர். இதை அவரே தனது ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார். இதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துகள் வந்தன. இருப்பினும், பெரும்பாலான கத்தார் நாட்டின் உள்நாட்டுச் சட்டங்களை வெளிநாட்டினர் மதிக்க வேண்டும் என்றே தெரிவித்தனர். கத்தாரின் முக்கிய அதிகாரிகளும் கூட இதே கருத்தையே குறிப்பிட்டனர். மேற்குலக நாடுகளின் எதிர்ப்பை மீறி கத்தார் இந்த விவகாரத்தில் மிக உறுதியாக உள்ளது. சரி அந்நாட்டின் தன்பால் ஈர்ப்பாளர்களுக்கு எதிராக அப்படி என்ன தான் சட்டம் இருக்கிறது. வாங்கப் பார்க்கலாம்.

என்ன தண்டனை
இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் கீழ் தன்பால் ஈர்ப்பு என்பது தப்பான ஒன்றாக கத்தார் கருதுகிறது. மேலும், இது அங்குத் தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. 2004ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் கீழ், சில நேரங்களில் கடுமையான அபராதத்துடன் ஏழு ஆண்டுகள் வரை சிறையும் கல்லால் அடித்தே கொல்லும் கொடூர மரண தண்டனையும் கூட அளிக்கப்படுகிறது. அங்கு 2004இல் இயற்றப்பட்ட சட்டத்தின் கீழ் தன்பால் ஈர்ப்பு தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் மரண தண்டனை மிக அரிதாகவே வழங்கப்படும்.

மரண தண்டனை
ஆண் மற்றும் பெண் என யாராக இருந்தாலும் திருமணத்திற்குப் பிறகு, தன்பால் ஈர்ப்பு உறவில் இருந்தால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். இது மட்டுமின்றி அங்குப் பல கேட்டாலே அதிர்ச்சி அடையும் அளவுக்கு பல கடுமையான சட்டங்கள் இந்த காலத்திலும் கூட அமலில் உள்ளது. தன்பால் ஈர்ப்பு மட்டுமின்றி, ஆண்கள் உடையைப் பெண்கள் அணிவதும், பெண்கள் உடையை ஆண்கள் அணிவதும் தவறான ஒன்றாகவே அங்குப் பார்க்கப்படுகிறது. மேலும், தன்பால் ஈர்ப்பார்கள் திருமணம் செய்து கொள்ளவும் தன்பால் ஈர்ப்பு குறித்து பிரசாரம் செய்யவும் கூட அங்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே அதற்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வது போல உடை அணிந்து வந்த செய்தியாளர் தடுத்து நிறுத்தப்பட்டார்.

பீருக்கும் தடை
அதேபோல கத்தாரில் மது விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் உள்ள டூட்டி ஃப்ரீ பிரிவில் இருந்து கூட பயணிகள் மதுவைக் கொண்டு வர முடியாது. சில குறிப்பிட்ட ஹோட்டல்களில் அரை லிட்டர் பீர் $15க்கு (ரூ.1,224) விற்கப்படுகிறது. உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போதும் மைதானங்களில் மது அருந்த கடைசி நிமிடத்தில் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்குக் கால்பந்து ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், தடையை நீக்க கத்தார் மறுத்துவிட்டது.

டார்ச்சர்
கத்தாரில் தன்பால் ஈர்ப்பாளர்களுக்கு மிகவும் கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது. எதிர்பாலினத்தினரிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள், சட்டவிரோதமாக போனை செக் செய்வது போன்ற அத்துமீறல் நடவடிக்கைகளால் தன்பால் ஈர்ப்பாளர்கள் கண்டறியப்பட்டு அவர்கள், சட்ட விரோதமாக அடைத்துவைக்கப்படுகிறார்கள். அங்கு அவர்களை மிக கொடூரமாக டார்ச்சர் செய்யும் கத்தார் போலீசார், அவர்களை அடித்து உதைத்து மிக மோசமாகத் தாக்குகிறது. மேலும், அவர்களை மாற்றுவதாகக் கூறி கட்டாய சிகிச்சை என்ற பெயரிலும் அடைத்துவைத்துக் கொடுமைப்படுத்துகிறது.

கொடூர சட்டம்
இந்தச் சட்டங்களுக்கு வெளிநாட்டுப் பயணிகளும் கூட தப்புவதில்லை. 2016இல் போலந்து நாட்டின் இன்ஸ்டாகிராம் பிரபலம் கிங் லக்ஸி கத்தாரில் தன்பால் ஈர்ப்பாளர் என்று கூறி கைது செய்யப்பட்டார். சுமார் இரண்டு மாதங்கள் அவர் சிறையில் இருக்க வேண்டி இருந்தது.1998இல் கத்தாருக்குச் சென்ற அமெரிக்க இளைஞர் ஒருவர், தன்பால் உறவில் ஈடுபட்டதற்காக ஆறு மாத சிறைத்தண்டனையும் 90 கசையடிகளும் விதிக்கப்பட்டது. இப்படி மிகக் கடுமையான தண்டனை விதிக்கும் கத்தாரில் தான் இந்த உலகக் கோப்பை நடக்கிறது. இதிலும் தன்பால் ஈர்ப்பு தொடர்பான சர்ச்சை தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
English summary
Football world cup 2022 Qatar’s LGBT+ laws are very hard: Qatar ootball world cup 2022 latest updates in tamil.