புதுடெல்லி: அருண் கோயலை தேர்தல் ஆணையராக மின்னல் வேகத்தில் நியமிக்க வேண்டிய அவசியமென்ன என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மத்திய அரசின் செயலாளராக பதவி வகித்த அருண் கோயல் கடந்த 18-ம் தேதி விருப்ப ஓய்வு பெற்றார். அடுத்த நாளே அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தேர்தல் ஆணையர்கள் மற்றும் தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்க இப்போது கடைபிடிக்கப்படும் நடைமுறையில் மாற்றம் செய்ய உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள், நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருதா போஸ், ரிஷிகேஷ் ராய் மற்றும் சி.டி.ரவிகுமார் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று (நவ.24) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “இந்த கோப்பு 24 மணி நேரத்தில் ஒப்புதல் பெற்றுள்ளது. மத்திய அரசுக்கு அப்படியான அவசரம் என்னவிருந்தது. மே.15-ஆம் தேதிதான் தேர்தல் ஆணையர் பணியிடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மின்னல் வேகத்தில் அடுத்த ஆணையருக்கான கோப்புக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. அப்படி மின்னல் வேகத்தில் ஒப்புதல் அளிக்க அவசியம் என்ன?” என்று கேள்வி எழுப்பினர்.
ஏற்கெனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “தேர்தல் ஆணையர் நியமனத்தில் எந்த முறைகேடும் இல்லையென்றால் மத்திய அரசு அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யட்டும். நாங்கள் அருண் கோயல் என்ற அதிகாரியின் திறனை கேள்விக்கு உள்ளாக்கவில்லை. மாறாக, எதன் அடிப்படையில் இந்தத் தேர்வு நடைபெற்றது என்பதையே கேட்கிறோம்” என்று உச்ச நீதிமன்றம் வினவியிருந்தது.
இந்நிலையில், இன்றைய வழக்கு விசாரணையின்போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வேங்கடரமணி எதிர்ப்பு தரப்பு வழக்கறிஞரைப் பார்த்து, “நீங்கள் சற்று நேரம் உங்கள் வாயை மூடிக் கொண்டு பிரச்சினையை முழுமையாக அணுகவும்” என்று காட்டமாகக் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது நீதிபதிகள், “தலைமைத் தேர்தல் ஆணையர் பதவிக்கு எதன் அடிப்படையில் சட்ட அமைச்சர் வெறும் 4 நபர்களின் பெயர்களை மட்டும் பரிந்துரைத்தார்” என்று கேள்வி எழுப்ப, அதற்குப் பதிலளித்த அட்டர்னி ஜெனரல், ”பணியாளர் மற்றும் அவர்களுக்கான பயிற்சி துறையின் தரவுகளின் அடிப்படையிலேயே இந்த தேர்வு நடைபெற்றது” என்றார்.
“தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டியது கட்டாயம் என அரசியல் சாசனத்தின் 324 (2)-வது பிரிவு கூறுகிறது. ஆனால், அரசியல் சாசனம் அமலுக்கு வந்து 70 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மத்தியில் ஆளும் ஆட்சியாளர்கள் தாங்கள் விரும்பும் நபரை இந்தப் பதவியில் அமர்த்துகிறார்கள். எனவே, தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக சட்டம் இயற்றவேண்டும்” என்று நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது.
அருண் கோயல் நியமனம்: புதிய தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து சமீபத்தில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயலை, தேர்தல் ஆணையராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். அவர் பொறுப்பேற்கும் நாளில் இருந்து இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. பஞ்சாப் மாநிலத்தின் கடந்த 1985-ம் ஆண்டு ஐஎஸ்எஸ் அதிகாரி அருண் கோயல். இவர் மத்திய அரசு செயலாளராக பணியாற்றியுள்ளார். மத்திய அமைச்சரவை அலுவலகத்தின் செயலாளர் பதவியிலிருந்து இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
அதன்பின் இவர் கனரக தொழில்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது. ஆனால் அவர் நவம்பர் 18-ல் தனது பதவியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். இந்நிலையில், மறுநாளே அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா பாண்டே ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவார்.