ஆமதாபாத் ”ஜாதி ரீதியாக மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி ஓட்டு வங்கி அரசியல் நடத்துவதே காங்கிரஸ் மாடல்,” என, பிரதமர் மோடி பேசினார்.
குஜராத்தில், முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த மாதம், 1 மற்றும் 5ம் தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
இங்குள்ள மேசானா என்ற இடத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி, பிரதமர் மோடி பேசியதாவது:
குஜராத்தில், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கடுமையான குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடியது. பல பகுதிகளில் மின்சாரமே இல்லை.
இந்த காலத்தில் மக்கள் பட்ட சிரமங்கள் எல்லாம் தற்போதைய இளைஞர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின் தான் இந்த பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்பட்டது. குறைந்த அளவு வளங்களை பயன்படுத்தி இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டது.
பா.ஜ., எப்போதுமே குறிப்பிட்ட ஒரு தரப்புக்கு சாதகமாகவோ, பாதகமாகவோ செயல்பட்டது இல்லை; ஆனால் காங்கிரஸ் அப்படியில்லை.
ஜாதி ரீதியாக மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி ஓட்டு வங்கி அரசியல் செய்வதே காங்கிரஸ் மாடல். ஊழல், வாரிசு அரசியல் ஆகியவை தான் காங்கிரஸ் மாடல்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் குஜராத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த தவறான நடைமுறைகளால் தான், மாநிலம் வளர்ச்சியில் பின்தங்கியது.
பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும் இந்த பிரச்னை சரி செய்யப்பட்டது. இந்த பிரிவினை அரசியலை, காங்கிரஸ் குஜராத்தில் மட்டுமல்லாமல், நாடு முழுதும் மேற்கொண்டது.
காங்கிரசுக்கு பழங்குடியினர் நலனில் அக்கறை இல்லை. அதனால் தான் பழங்குடியினத்தைச் சேர்ந்த திரவுபதி முர்முவை ஜனாதிபதி வேட்பாளராக நாங்கள் அறிவித்தபோது, அவருக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கவில்லை.
இருந்தாலும், பழங்குடியின மக்களின் ஆசிர்வாதத்துடன் திரவுபதி முர்மு, ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்