திருநெல்வேலி: தென் மாவட்டங்களில் கஞ்சா விற்பனை பெருமளவு கட்டுப் படுத்தப்பட்டு உள்ளதாகவும், முழுமையாக ஒழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தெரிவித்தார்.

திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ்குமார், காவல்துறை கண்காணிப்பாளர்கள் சரவணன், ஹரிகிரண் ஆகியோருடன் நேற்று அவர் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு 188 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இவ்வாண்டு இதுவரை 204 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 958 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நன்னடத்தைக்கான பிணை பத்திரம் பெறப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்குமுன் சீவலப்பேரில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களில் குற்றச் செயலில் ஈடுபடுபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கஞ்சா விற்பனையை முழுவதுமாக ஒழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கஞ்சா கடத்தல் கேந்திரமாக திகழும் ஆந்திரா வரை சென்று எதிரிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்ததுடன் அவர்களது 2 ஆயிரம் வங்கி கணக்குகள் மற்றும் ரூ.15 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் முடக்கப் பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *