புதுடில்லி: பணப் பரிமாற்ற மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட புதுடில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், ஹோட்டலில் இருந்து வரவழைக்கப்பட்ட உணவு மற்றும் பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை, புதுடில்லி திஹார் சிறையில் இருந்தபடி சாப்பிடும் அடுத்த ‘வீடியோ’ வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுடில்லியில், சுகாதாரம் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின், பணப் பரிமாற்ற மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, புதுடில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இலாகா இல்லாத அமைச்சராக அவர் நீடிக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு ‘வீடியோ’ வெளியானது. இதில், சிறையில் சத்யேந்தர் ஜெயினுக்கு ஒருவர் மசாஜ் செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த வீடியோ வெளியானதும் புதுடில்லி அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. ‘ஆம் ஆத்மி அமைச்சருக்கு சிறையில் வி.வி.ஐ.பி., சலுகை காட்டப்பட்டுள்ளது’ என, பா.ஜ., தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
இதற்கிடையே, சத்யேந்தர் ஜெயின் புதுடில்லி நீதிமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: நான் ஜைன மத சம்பிரதாயம், விரதங்களை பின்பற்றுகிறேன். ஆனால், சிறையில் எனக்கு அதற்கேற்ற உணவு வகைகள் வழங்கப்படுவது இல்லை. பழம், காய்கறிகள், பேரீச்சம் பழம் போன்றவற்றை தரும்படி கோரிக்கை விடுத்தேன். அந்த உணவு தரப்படவில்லை. இதனால், 28 கிலோ எடை குறைந்துள்ளேன். இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.

இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி சிறை நிர்வாகத்துக்கும், அமலாக்கத் துறைக்கும் புதுடில்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், சத்யேந்தர் ஜெயின் தொடர்பான புதிய வீடியோ நேற்று வெளியானது. இதில், சத்யேந்தர் ஜெயின், சிறைக்குள் இருந்தபடியே ஹோட்டலில் இருந்து வரவழைக்கப்பட்ட உணவை சாப்பிடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
மேலும், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அவர் உண்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. இதன் வாயிலாக, அவரது உடல் எடை 8 கிலோ அதிகரித்துள்ளதாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ.,வினர் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து கேள்வி எழுப்பி உள்ளனர்.
இது குறித்து வெளியுறவுத் துறை இணை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான மீனாட்சி லேகி கூறியதாவது: ஆம் ஆத்மி கட்சியினர், சிறையை சொகுசு விடுதியாக மாற்றியுள்ளனர். சொகுசு விடுதியில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் சிறையில் உள்ள சத்யேந்தர் ஜெயினுக்கு கிடைக்கின்றன. பாலியல் பலாத்கார வழக்கில் கைதானவரை வைத்து, மசாஜ் செய்வது அவமானகரமான செயல். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்