ஆன்லைன் ரம்மி தடை மசோதா: விளக்கம் கேட்கும் ஆளுநர்… ஒப்புதல் கிடைக்குமா?

ன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்னும் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது இம்மசோதா தொடர்பாக சில விளக்கங்கள் கேட்டு தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் கடிதம் எழுதி இருப்பதால், இம்மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் கிடைக்கும் எனக் கேள்வி எழுந்துள்ளது.

அதிகரித்த தற்கொலைகள்…

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடும் ஏராளமான பேர் பணத்தை இழந்து தற்கொலை செய்யும் அவலம் தமிழகத்தில் தொடர் கதையாக நிகழ்ந்து வந்தது.

இளைஞர்கள், அரசு மற்றும் தனியார் பணியில் இருப்போர், ஐடி நிறுவனங்களில் பணியாற்றுவோர் எனப் பலதரப்பட்ட நபர்களும் இந்த ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் சிக்கித் தவித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

செல்லாமல் போன சட்டம்

இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த கடந்த அதிமுக ஆட்சியின் போதே ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்ய சட்டசபையில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால் இதை எதிர்த்து சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சட்டத்தில் பல்வேறு குறைபாடுகளை சுட்டிக் காட்டி சட்டத்தை ஏற்க இயலாது என்று ரத்து செய்துவிட்டனர்.

புதிய சட்ட மசோதா

இதைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்வது தொடர்ந்த நிலையில், தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை மீண்டும் தடை செய்ய சட்ட வரைவை தயாரிப்பதற்காக , ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு குழுவை அமைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இக்குழு கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி தனது அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது. அதன்பின், ஆன்லைன் சூதாட்ட தடை தொடர்பான அவசர சட்டம் தயாரிக்கப்பட்டு, செப்டம்பர் 26 ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.

கிடப்பில் போட்ட ஆளுநர்

இதனையடுத்து இது தொடர்பான சட்ட மசோதா ஆளுநர் ஆர்.என். ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அவர் இம்மசோதாவுக்கு இதுவரை ஒப்புதல் வழங்காமல் உள்ளார். இது குறித்து சர்ச்சை எழுந்தது.

* ” ஆன்லைன் சூதாட்டத்தினால் இன்னும் ஓர் உயிர் போனால்தான் ஆளுநர் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்குவாரா..?” என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதிகரித்த அழுத்தம்…

இந்த நிலையில், இந்த அவசர சட்டமசோதா வருகிற 27 ம் தேதியுடன் காலாவதியாகிறது என்பதால், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரி தமிழக ஆளுநரை சந்தித்து தமிழக அரசு தரப்பில் வலியுறுத்த இருப்பதாக, கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்திருந்தார்.

இதனிடையே , எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, முன்னாள் அமைச்சர்களுடன் நேற்று சந்தித்து, திமுக அரசுக்கு எதிராக 10 பக்க புகார் கடிதம் ஒன்றை அளித்தார். அதே சமயம், ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதனால் இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு அழுத்தம் அதிகரித்தது.

விளக்கம் கேட்டு அரசுக்கு கடிதம்

இந்த நிலையிலேயே, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வது தொடர்பான மசோதா தொடர்பாக சில விளக்கங்களைக் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் அனுப்பி உள்ளதாகவும்,

* ஆளுநரின் கேள்விகளுக்கு தமிழக அரசு சார்பில் இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்கப்படும் என்றும் தகவல் தகவல் வெளியாகி உள்ளது.

* கடந்த காலங்களில் ‘நீட்’ தேர்வு விலக்கு மசோதாவையும் நீண்ட நாட்கள் கிடப்பில் போட்டு, பின்னர் அம்மசோதா தொடர்பாக தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு மசோதாவை திருப்பி அனுப்பியது சர்ச்சையானது.

* திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வலியுறுத்தலைத் தொடர்ந்தே அவர் அந்த மசோதாவை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார். இருப்பினும் அம்மசோதாவுக்கு இன்னும் குடியரசுத்தலைவர் ஒப்புதல் வழங்காததால், அது நிலுவையிலேயே உள்ளது.

இந்த நிலையில், ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதால், இந்த மசோதாவுக்கும் நீட் மசோதா கதி ஏற்படுமா அல்லது விரைவில் ஒப்புதல் கிடைக்குமா என்பது அடுத்த சில தினங்களில் ஆளுநர் எடுக்கப்போகும் முடிவில் தெரியவந்துவிடும்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

พนันบอล