பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:

என்.எல்.சி., விரிவாக்கத்திற்கு நிலம் கொடுப்பவர்களுக்கு வேலை அல்லது நிதி வழங்கப்படும் என, கடலுார் மாவட்ட நிர்வாகம் ஆசை காட்டியிருக்கிறது. கடலுார் மாவட்ட அமைச்சர்களின் வழிகாட்டுதலில், அனைத்து பணிகளும் நடப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதே அமைச்சர்கள் தான் தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, என்.எல்.சி.,க்கு எதிராக போராட்டங்களை நடத்தினர்; ஆனால், இப்போது என்.எல்.சி.,க்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர். இரட்டை நிலைப்பாடு எடுத்துள்ள அவர்கள் மீது மக்கள் நம்பிக்கையிழந்து விட்டனர்.

இவரே கூட நாளைக்கு தப்பி தவறி ஆளுங்கட்சியாக மாறினால், என்.எல்.சி.,க்கு ஆதரவாகத்தான் நடக்க வேண்டி வரும்!

மா.கம்யூ., அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் பேட்டி:

வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை வீழ்த்த, தமிழகத்தில் ஏற்கனவே தி.மு.க.,வுடன் மா.கம்யூ., உள்ளிட்ட கட்சிகள் அமைத்த கூட்டணி தொடரும். தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., இணையுமா என்ற யூகத்துக்கு பதில் சொல்ல முடியாது.

பொறுப்பான கூட்டணி கட்சியாக, ‘பா.ம.க., குறித்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முடிவு செய்வார்’ என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அறிக்கை:

திருவாரூர் அருகே தொகுப்பு வீட்டில், காரை பெயர்ந்து விழுந்ததில், ஆனந்த் என்ற சிறுவன் படுகாயம் அடைந்திருப்பது வேதனை அளிக்கிறது. தி.மு.க., அரசு மக்களின் பாதுகாப்பை கருத்தில் வைத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து பழைய தொகுப்பு வீடுகளையும், முறையாக ஆய்வு செய்து உடனே சீரமைத்து தர வேண்டும்.

உங்க டெல்டா பகுதி சிறுவன் படுகாயத்துக்கு வேதனை தெரிவித்தால் மட்டும் போதுமா… உங்க சார்புல, நிவாரண உதவி தரலாமே!

ம.தி.மு.க., தலைமை நிலைய செயலர் துரை பேட்டி:

அ.தி.மு.க.,வை பலவீனப்படுத்தி விட்டு, மாநிலத்தில் ஒரு மாற்று சக்தியாக, பா.ஜ., விஸ்வ ரூபம் எடுத்து வளர்ந்து வருகிறது. இந்த நிலையை அறிந்து, அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஓரணியாக திரள வேண்டும்.

latest tamil news

அ.தி.மு.க., பலமாக வேண்டும் என்ற இவரது விருப்பத்தை பார்த்தால், அடுத்த தேர்தலில் அங்க ஜாகையை மாத்துற ‘பிளான்’ இருக்குதோ?

தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:

‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என, அண்ணாதுரை கூறினார். ஆனால், நான் ஏழையின் சிரிப்பில் கருணாநிதியை காண்கிறேன்’ என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க., ஆட்சியில் சிரிப்பாய் சிரித்து கொண்டிருக்கிறது ஏழைகளின் வாழ்க்கை என்பது உண்மை தான்.

‘எங்கயும் நான் இறைவனை காண மாட்டேன்’ என்பதில் முதல்வர் உறுதியா இருப்பார் போலும்!


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *